Published : 27 Dec 2019 10:20 AM
Last Updated : 27 Dec 2019 10:20 AM
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆண்டுதோறும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இன்னொரு டாப் அணிகளுக்கு இடையிலான சூப்பர் சீரிஸ் தொடரை நடத்த அறிவித்ததையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் கெவின் ராபர்ட்ஸ், அந்தக் கருத்தை வரவேற்றதோடு, இந்தியாவுக்கு வெளியேயும் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கங்குலியின் இந்த கருத்து புதிதாக இருக்கிறது என்று கூறிய அவர், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு வெளியே பல கிரிக்கெட் வாரியங்கள் நிதியின்றி அல்லல் படுவதாகவும் அனைத்து நாடுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து தரமான கிரிக்கெட்டையும் வழங்க வேண்டும் என்றார்.
நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் 3 ஆண்டுகளாக நஷ்டம் அடைந்து வருவதால் கடும் நிதித் திண்டாட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார். இனி பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்காக நியூஸிலாந்து 32 ஆண்டுகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசி தொடர் நடத்துவதை எதிர்க்கும் பிசிசிஐ சொந்த நலன்களுக்காக சூப்பர் சீரிஸ் தொடரை முன் மொழிவது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
ஐசிசி தொடர் மூலம் வரும் வருவாயில்தான் பணக்கஷ்டத்தில் இருக்கும் வாரியங்களை மீட்டெடுக்க முடியும், இந்நிலையில் கங்குலியின் இந்த சூப்பர் சீரிஸ் முடிவு 4 நாடுகளுக்கு மட்டும் பயனளிப்பதாகவே முடியும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் கருதுகின்றனர்.
கெவின் ராபர்ட்ஸ் கூறியது:
கங்குலி பொறுப்பேற்றவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆட வைத்தார், இப்போது சூப்பர் சீரிஸ் என்ற புதிய ஐடியாவை அளித்துள்ளார். இவை வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் முன்னிலை வகிக்கும் நாங்கள் பிற நாடுகளில் கிரிக்கெட் வளர்ச்சி குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஐசிசி போன்ற அமைப்புக்கு உதவும் வாரியமாக இருக்க விரும்புகிறோம், முன்னுதாரணமாக திகழ்ந்து அடுத்து ஆப்கான் அணியை அடுத்த ஆண்டு ஒரு முழு தொடருக்கு அழைக்கவிருக்கிறோம்.
துணைக்கண்டத்தில் இந்தியா உட்பட வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் கிரிக்கெட் ஒரு மதமாகவே மாறியுள்ளது. எனவே கிரிக்கெட் உலகம் முழுதும் வளர்ச்சியடைய நாங்கள் முன்னெடுப்புகளைச் செய்யவிருக்கிறோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT