Published : 17 May 2014 02:30 PM
Last Updated : 17 May 2014 02:30 PM
பிரதமராகவுள்ள நரேந்திர மோடி குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர்களில் முகமது அசாருதீன் மற்றும் முகமது கயீஃப் ஆகியோர் தோல்வியை தழுவினர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவராக இருந்து பிறகு பொதுத் தேர்தல்களை முன்னிட்டு பதவி விலகிய பாஜக-வின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி, முன்னாள் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிடம் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான நவ்ஜோத் சிங் சித்து, இந்தத் தொகுதியில் போட்டியிடவேண்டியது. ஆனால் அருண் ஜெட்லி போட்டியிட்டு எதிர்பாராவிதமாக தோல்வியைச் சந்தித்துள்ளார்.
பாஜக-வைச் சேர்ந்த அனுராக் தாக்கூர்- பிசிசிஐ-யின் இணைச் செயலரான இவர், இமாச்சலத்தின் ஹமிர்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஸ்ரீநகர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, குணா தொகுதியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
இன்னும் கிரிக்கெட் ஆட்டங்களில் ஈடுபட்டு வரும் முகமது கயீஃப், உ.பி. மாநிலத்தின் புல்பூர் தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்குளை மட்டும் பெற்று 4-வது இடத்தைப் பெற்றார்.
2-வது முறையாக மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும் முகமது அசாருதீன், ராஜஸ்தானில் போட்டியிட்டார். அசாருதீன் 4 லட்சம் வாக்குகள் பெற்றும் தோல்வியையே தழுவினார். இவரை விடவும் அதிக வாக்குகளைப் பெற்றார் பாஜக-வின் சுக்பிர் சிங் ஜானபுரியா.
1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றி அணியில் இடம்பெற்றிருந்த, பாஜக வேட்பாளர் கீர்த்தி ஆசாத், பீகாரின் தார்பங்கா தொகுதியிலிருந்து தொடர்ந்து 3வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT