Published : 25 Dec 2019 02:38 PM
Last Updated : 25 Dec 2019 02:38 PM
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முன்வைத்த 4 நாடுகள் கிரிக்கெட் போட்டி என்ற யோசனை தோல்வி அடைந்தது, உதவாதது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ராஷித் லத்தீப் விமர்சித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மற்றொரு நம்பர் ஒன் அணியைச் சேர்த்து ஆண்டுதோறும் 4 நாடுகள் சூப்பர் சீரிஸ் கிரிக்கெட் போட்டி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறுகையில், " ஆஸி., இங்கிலாந்து, இந்தியா, மற்றொரு டாப் அணி சேர்த்து 4 நாடுகள் சூப்பர் சீரிஸ் தொடர் 2021ம் ஆண்டில் தொடங்குகிறது. இதன் முதல் தொடர் இந்தியாவில் நடைபெறும். இத்திட்டத்தின் படி இதே தொடர் ஆஸ்திரேலியாவில் ஒன்று அக்.நவ அல்லது பிப்ரவரி.- மார்ச் மாதம் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 4 நாடுகள் கிரிக்கெட் தொடர் நடத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும். அடிக்கடி இதுகுறித்து 4 நாடுகளும் பேசி, விவாதித்தபின் முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தது.
ஐசிசி-யில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்திய கிரிக்கெட் வாரியங்களின் செல்வாக்கு அளவுக்கு மீறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதற்கிடையே பணமில்லாமல் அயர்லாந்து தொடர் ஒன்றையே ரத்து செய்ததும், ஒரு டெஸ்ட் தொடரை டி20 மேட்சாக மாற்றியிருப்பதும் பற்றி கிரிக்கெட் ஆர்வலர்கள் கடும் விமர்சனம் வைத்து வரும் நிலையில், கங்குலியின் இந்தத் கனவுத்திட்டம் நிறைவேறுமா என்று தெரியவில்லை.
கங்குலியின் கனவுத்திட்டம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ராஷித் லத்தீப் அளித்த பேட்டியில் கூறுகையில், " பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் 3 பெரிய நாடுகள் இணைந்து நடத்தும் கிரிக்கெட் போட்டி தோல்வி அடையும், உதவாத திட்டம். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகள் இணைந்து கிரிக்கெட் தொடர் நடத்தினால்,அ து மற்ற நாட்டு அணிகளை ஒதுக்குவதாகவே அர்த்தமாகும். இது நிச்சயம் நல்ல விஷயமாக இருக்க முடியாது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டு அது தோல்வியில் முடிந்தநிலையில் வேறு வடிவத்தில் வருகிறது "எனத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT