Published : 22 Dec 2019 07:17 PM
Last Updated : 22 Dec 2019 07:17 PM
இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை இந்திய அணியின் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் கட்டாக்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 316 சேர்த்தால் வெற்றி எனும் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்திய அணியில் ராகுல், ரோஹித் சர்மா நிதானமான தொடக்கத்தை அளித்துள்ளனர். ரோஹித் சர்மா 9 ரன்களை எட்டியபோது கடந்த 22 ஆண்டுகளாக இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா வசம் இருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
ஜெயசூர்யா கடந்த 1997-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகள் முழுவதிலும் 2 ஆயிரத்து 387 ரன்கள் சேர்த்திருந்தார். தற்போது 2019-ம் ஆண்டில் ரோஹித் சர்மா 2 ஆயிரத்து 379 ரன்களுடன் இருந்தார். ஒரு ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிகமான ரன்கள் குவித்த வீரர் என்ற அடிப்படையில் ஜெயசூர்யாவை முந்துவதற்கு ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அவரை ரோஹித் முறியடித்தார்.
அதுமட்டுமல்லாமல் ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில்அதிகமான ரன்களைக் குவித்த வீரர்களில் தற்போது ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.
தற்போது ரோஹித் சர்மா 2,388 ரன்களைக் கடந்து சென்றுள்ளார். விராட்கோலி 2,370 ரன்களுடன் உள்ளார். ஒருவேளை இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மாவைக் காட்டிலும் அதிகமான ரன்களை விராட்கோலி சேர்க்க முடியாவிட்டால் ரோஹித் சர்மாதான் இந்த ஆண்டில் அதிகமான ரன் சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெறுவார்
கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து ஒரு காலண்டர் ஆண்டில் அதிகமான ரன்களைச் சேர்த்த வீரர் எனும் பெருமையை விராட் கோலிதான் தக்கவைத்துள்ளார். 2016-ம் ஆண்டில் 2,595 ரன்கள் சேர்த்த கோலி, 2017-ம் ஆண்டில் 2,735 ரன்களும், 2018ம் ஆண்டில் 2,735 ரன்களும் சேர்த்து முதலிடம் பிடித்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக காலண்டர் ஆண்டில் அதிகமான ரன்கள் சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெற்றவர் கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT