Published : 22 Dec 2019 01:24 PM
Last Updated : 22 Dec 2019 01:24 PM
கட்டாக்கில் இன்று நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை இறுதி செய்யும் கடைசிப் போட்டி இன்று கட்டாக் நகரில் பகலிரவாக நடக்கிறது.
விராட் கோலி தலைமையில் தொடர்ந்து 9 இருதரப்பு ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது. இந்தப் போட்டியில் வென்றால் அது 10-வது தொடராக அமையும். அதேபோல 13 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்வதற்கு மே.இ.தீவுகள் அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒருமாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய தீபக் சாஹருக்குப் பதிலாக, நவ்தீப் ஷைனி சேர்க்கப்பட்டுள்ளார். நவ்தீப் ஷைனிக்கு இது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாகும். மற்ற வகையில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மே.இ.தீவுகள் அணியிலும் எந்த மாற்றமும் இல்லை.
ஆடுகளம் எப்படி?
கட்டாக்கில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் ஆடுகளமாகும். முதலில் பேட்டிங் செய்யும் அணி 280 ரன்கள் வரை அடிக்கும் அளவுக்கு ஒத்துழைக்கக்கூடியது. ஆடுகளம் தட்டையாகவும், கடினமாகவும் இருப்பதால், பந்துகள் நன்றாக பேட்ஸ்மேனை நோக்கி எழும்பி வரும் என்பதால், அடித்து ஆடுவதற்கு எளிதாக இருக்கும்.
அதேபோல சேஸிங் செய்யும் அணிக்கும் பேட்டிங் நன்றாக ஒத்துழைக்கும். ஆனால் 5 மணிக்கு மேல் பனி விழுவது ஆடுகளத்தின் தன்மையை மாற்றக் கூடும். பந்துவீச்சாளர்களுக்கும் பந்தை இறுகப் பற்றி வீசுவதிலும், ஸ்விங் செய்வதிலும் சிரமத்தைச் சந்திக்கலாம். எப்படியாகினும், பந்துவீச்சாளர்களைக் காட்டிலும், பேட்ஸ்மேன்களுக்கு மைதானம் நன்கு ஒத்துழைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT