Published : 22 Dec 2019 12:41 PM
Last Updated : 22 Dec 2019 12:41 PM

ஐபிஎல் 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 48 வயது வீரர் நீக்கப்படுவாரா?

பிரவிண் தாம்பே : கோப்புப்படம்

கொல்கத்தா

ஐபிஎல் 2020-ம் ஆண்டு சீசனுக்கான ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்ட 48 வயது வீரரை அந்த அணி நிர்வாகம் மீண்டும் கைவிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 48 வயதான வீரர் பிரவிண் தாம்பே. உள்நாட்டுப் போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடி வந்த பிரவிண் தாம்பேவை ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (2017), குஜராத் லயன்ஸ் (2016) ஆகிய அணிகள் இதற்கு முன் எடுத்துள்ளன.

2014-ம் ஆண்டில் ராஜஸ்தான் அணியில் லெக் ஸ்பின்னரான பிரவிண் தாம்பே இருந்தபோது கொல்கத்தா அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அப்போதே அவருக்கு 42 வயது.

இந்நிலையில், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பிரவிண் தாம்பேவை ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் அதிக வயதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் பிரவிண் தாம்பே என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சூழலில் பிரவிண் தாம்பே, கடந்த ஆண்டு துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடந்த டி10 லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இதனால், பிசிசிஐ அனுமதியின்றி டி10 லீக் போட்டியில் விளையாடிய வீரரை ஐபிஎல் அணி தேர்வு செய்யக்கூடாது என்ற விதிமுறை இருப்பதால் அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாபஸ் பெற்று வேறு வீரரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகக்குழு தலைவர் பிரிஜேஷ் படேல் நிருபர்களிடம் கூறுகையில், " பிசிசிஐ அமைப்பில் பதிவு செய்த வீரர் ஒருவர் சர்வதேச டி20, டி10 லீக் போட்டியில் அனுமதியின்றி பங்கேற்க முடியாது. கவுண்டி கிரிக்கெட் போட்டியில் வேண்டுமானால் பங்கேற்கலாம். ஆனால், மற்ற போட்டிகளில் பங்கேற்க முடியாது. அவ்வாறு பிரவிண் தாம்பே பங்கேற்றுள்ளார் என்பதால், அவரைத் திரும்பப் பெற கொல்கத்தா அணியிடம் பேசப்படும்." எனத் தெரிவித்தார்.

ஆனால், இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிரவிண் தாம்பேவை வாபஸ் பெறுவது குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. ஐபிஎல் போட்டிகளில் இந்த சீசன் மட்டுமல்லாமல், இனிவரும் சீசன்களில் பிரவிண் தாம்பே விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x