Published : 18 Dec 2019 10:44 PM
Last Updated : 18 Dec 2019 10:44 PM

ரோஹித், ராகுல் வெறியாட்ட சதங்கள், குல்தீப் ஹாட்ரிக்: மே.இ.தீவுகளை நொறுக்கி இந்திய அணி பதிலடி 

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணியை இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி ரோஹித் சர்மா, ராகுல் ஆகியோரின் காட்டடி தர்பாரில் 387/5 என்ற அதிகபட்ச ஸ்கோரை எடுக்க, தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் குல்தீப் ஹாட்ரிக் சாதனையில் 43.3 ஓவர்களில் 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று இதுவரை சமன் செய்துள்ளது, இன்னொரு போட்டி மீதமுள்ளது. கடந்த போட்டியில் டாஸ் வென்று சேஸ் செய்தது சரி ஆனால் இந்தப் பிட்சில் முதலில் பேட் செய்திருக்க வேண்டும் என்பதே மே.இ.தீவுகள் பெற்ற பாடம். ஆட்டம் முழுக்க பிட்ச் மட்டைப் பிட்ச்தான், முதலில் பேட் செய்திருந்தால் மே.இ.தீவுகள் பேட்ஸ்மென்கள் கொஞ்சம் ஃப்ரீயாக ஆடியிருப்பார்கள்.

மேலும் முதல் போட்டி தோல்வியினால் காயம்பட்ட புலிகளாக இந்திய அணி இருந்த நிலையில் கையில் கொண்டு போட்டியைக் கொடுத்தது போல் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார் போலார்ட். அசாருதீன் ஒன்று கூறுவார் அதுதான் law of averages அதாவது ஒரு போட்டியில் விரட்டல் சாத்தியமானது என்றால் அதே சாத்தியம் அடுத்த போட்டியிலும் இருக்க வேண்டிய அவசியமில்லை. இங்குதான் அசாருதீனின் கொள்கைப் படி இந்த முறை பொலார்ட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துப் பார்த்திருக்கலாம்.

பீல்டிங்கைத் தேர்வு செய்து விட்டு தப்பும் தவறுமான பீல்டிங் வியூகத்தில் எளிதான பவுண்டரிகளை ரோஹித்துக்கும், ராகுலுக்கும் கொடுத்தது தவறு. பவுலர்கள் இவர் அமைத்த பீல்டிங்குக்கு வீசவில்லை, அல்லது அவர்கள் வீசுவதற்குத் தகுந்த களவியூகம் இல்லை.

ஷமி ஏற்படுத்திய திருப்பு முனையும் குல்தீப் யாதவ்வின் ஹாட்ரிக்கும்:

இலக்கை விரட்டும் போதும் கூட ஹோப், பூரன் இந்திய அணியின் இலக்கை கொஞ்சம் தொந்தரவுக்குள்ளாக்குவார்கள் போல்தான் தெரிந்தது, ஆனால் அங்குதான் மொகமது ஷமி ஒரு காலத்தில் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் போன்றவர்கள் போல் வீசி பூரன் 47 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருந்த போது அபாரமான ஒரு ஆசை காட்டி மோசம் செய்யும் பந்தில் லாங் லெக்கில் குல்தீப் கேட்சுக்கு வீழ்த்தினார். அடுத்த பந்தே அருமையான டெஸ்ட் மேட்ச் ரக அவுட் ஸ்விங்கரை ஷமி வீச பொலார்ட் தொட்டார் அதனால் கெட்டார், பந்த் பந்தைப் பிடிக்க ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் சென்று கொண்டிருந்த மே.இ.தீவுகள் அணி இந்த விக்கெட்டுகளினால் 30வது ஓவரில் 192/5 என்று ஆனது. பிறகு அபாரமாக ஆடி 46 ரன்கள் எடுத்த கீமோ பாலை பவுல்டு செய்து ஷமி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன் பிறகு 33வது ஓவரை குல்தீப் வீசும் போது மே.இ.தீவுகளின் ஸ்கோர் 203/5, 18 ஓவர்களில் 185 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்று கடினமான நிலையில் இருந்தனர். அப்போது ஹோல்டர் குல்தீப் வீசிய முதல் பந்தை லாங் ஆனில் மேல் சிக்ஸ் அடித்தார். ஆனால் அதே ஓவரில் 4,5, 6ம் பந்துகளில் ஹோப் (78, 85 பந்துகள் 7 நான்குகள் 3 ஆறுகள்), ஹோல்டர் (11), ஜோசப் (0) ஆகியோரை வரிசையாக வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் தன் 2வது ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.

முன்னதாக எவின் லூயிஸ், ஷேய் ஹோப் நிதானமாக ஆடினர், அதாவது இமாலய இலக்கை வெற்றிகரமாக விரட்டுவது கடினம் என்றாலும் அதற்கும் ஒரு நல்ல அடித்தளம் அமைத்தால் சாத்தியமே என்ற நம்பிக்கையுடன் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் ஆடி 11 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்தனர். எவின் லூயிஸ் 35 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்குர் பவுன்சருக்கு அய்யரிடம் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

வெஸ்ட் இண்டீஸின் பூரன், ஷேய் ஹோப் எதிர்த்தாக்குதல்தான் சரி என்று அடிக்கத் தொடங்கினர். அப்போதுதான் இந்திய அணி பீல்டிங்கையும் கோட்டை விடத் தொடங்கியது, ஜடேஜாவை சாத்தி எடுத்தனர் அவர் 10 ஓவர்களில் 74 கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தீபக் சாஹர் பந்து வீச்சில் ஒன்றுமேயில்லை. பூரன் 47 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்து அச்சுறுத்தினார். முன்னதாக ஷிம்ரன் ஹெட்மையர் 4 ரன்களில் ரன் அவுட் ஆக, சேஸ் ஜடேஜாவின் அதிசயமாகத் திரும்பிய பந்தில் பவுல்டு ஆனார். அதன் பிறகுதான் ஹோப், பூரன் இணைந்து 13 ஓவர்களில் 106 ரன்கள் கூட்டணி அமைத்தனர், அதைத்தான் ஓரே ஓவரில் ஷமி உடைத்து போலார்டையும் டக் அவுட் ஆக்க மே.இ.தீவுகள் விரட்டல் பிசுபிசுத்துப் போய் தோல்வியில் முடிந்தது.

ரோஹித் - ராகுல் நெடிய கூட்டணியுடன் வெறியாட்டம்: விராட் கோலியின் அரிய கோல்டன் டக்

இந்திய அணி பேட்டிங் ஆரம்பித்தவுடன் காட்ரெல் பந்து வீச்சை ராகுல் அடித்து ஆடத் தொடங்கினார், ரோஹித் கொஞ்சம் நிதானித்தார். 21 ஓவர்கள் வரை இருவரும் ஸ்கோரிங் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்தினர் 21வது ஓவரில் இருவரும் அடிக்கத் தொடங்கினர். 20 ஓவர்களில் இந்தியா 98/0 என்று இருந்தது. கடைசி 30 ஓவர்களில் கிட்டத்தட்ட 300 ரன்கள் என்றே கூற வேண்டும், அடின்ன அடி மே.இ.தீவுகளின் வீரர்கள் மைதானம் நெடுக பந்தை விரட்டிக்கொண்டிருந்ததைத்தான் பார்க்க முடிந்தது.

20-25 ஓவர்களில் 47 ரன்கள் விளாசல். இதில் ரோஹித் 5 பவுண்டரிகள் ராகுல் 4 பவுண்டரிகள். ராஸ்டன் சேஸ் பந்தை ரோஹித் அடிக்க ஷிம்ரன் ஹெட்மையர் 28வது ஓவரில் கேட்சை விட்டது அவர்களுக்கு கேடாக முடிந்தது. ராகுல் சதத்தை நோக்கிச் செல்ல ரோஹித் சர்மா தன் ஆட்டத்தை அடிதடியாக மாற்றினார். எல்லா இடங்களிலும் பவுண்டரிகள் வரத் தொடங்கின 37 ஓவர்களில் 227 ரன்கள் முதல் விக்கெட்டுக்காகக் குவிக்கப்பட்டது. சில ஷாட்கள் உண்மையில் நம்ப முடியாத ஷாட்கள். அப்போது ராகுல் 104 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 102 ரன்களுடன் வெளியேறினார்.

விராட் கோலி, பொலார்ட் வீசிய பந்தில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி கோல்டன் டக்கில் ஆட்டமிழந்தார். அய்யர் பந்துக்கு ஒரு ரன் என்று எடுக்க ரோஹித் சர்மா கேட்டுக் கேட்டு அடிக்கத் தொடங்கியிருந்தார். சதம் எடுத்த அவர் அதன் பிறகு 29 பந்துகள்ல் 55 ரன்களை விளாசித்தள்ளினார். 138 பந்துகளில் 17 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 159 ரன்களை விளாசினார் ரோஹித் , ஆனால் 4வது இரட்டைச் சதம் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக ஆட்டமிழந்தார்.

இப்போது நினைத்திருந்தால் கூட இந்தியாவை கட்டுப்படுத்தியிருக்கலாம் ஆனால் ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் அய்யர் வெளுத்து வாங்கி விட்டனர். ஜோசப்பை 2 ஆஃப் சைடு சிக்சர்களை அடித்த பந்த் காட்ரெல் பந்துகளையும் நொறுக்கித்தள்ளினார். அய்யர் காட்ரெலின் ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என்று பின்னி எடுத்தார். அய்யர், பந்த் இருவரும் 4 ஓவர்களில் 73 ரன்களைக் குவிக்க கடைசி 20 ஓவர்களில் இந்திய அணியினர் 217 ரன்களை விளாசி கடைசி 10 ஓவர்களில் 3வது அதிகபட்ச ரன்குவிப்பை நிகழ்த்த இந்திய அணி 387 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. மே.இ.தீவுகள் 280 ஆல் அவுட்.

தொடரை இந்திய அணி 1-1 என்று சமன் செய்தது. இன்னும் ஒரு போட்டி உள்ளது, ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x