Published : 11 May 2014 10:00 AM
Last Updated : 11 May 2014 10:00 AM

பஞ்சாபை சமாளிக்குமா கொல்கத்தா?

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர்கொள்கிறது.

இந்த ஐபிஎல்-லில் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள பஞ்சாப், இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7-ல் வென்றுள்ளது. அந்த அணியின் மேக்ஸ்வெல், மில்லர் ஆகியோர் எதிரணியின் பந்து வீச்சை சிதறடித்து வருகின்றனர். இதுவே அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. பஞ்சாப், மும்பை அணிக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்தது. அந்தப் போட்டியிலும் கூட 168 ரன்களை பஞ்சாப் குவித்தது. எனினும் மும்பை அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் அந்த ஸ்கோரை எட்ட முடிந்தது.

ஏற்கெனவே பஞ்சாபிடம் கொல்கத்தா 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விய டைந்துள்ளது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் பஞ்சாப் 132 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனினும் கொல்கத்தாவின் பேட்டிங் மோசமாக அமைந்தது, பஞ்சாப் வீரர் சந்தீப் சர்மாவின் அபார பந்து வீச்சு ஆகியவை காரணமாகவே அந்த ஆட்டத்தில் பஞ்சாப் வென்றது.

முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் மேக்ஸ்வெல் (15 ரன்), மில்லர் (14 ரன்) ஆகியோரை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கச் செய்த அணி என்பது கொல்கத்தாவுக்கு சாதகமான அம்சம். மேலும் 8 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே வென்றுள்ள கொல்கத்தா அணிக்கு இதில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகும்.

பெங்களூரில் இரவு 8 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை பங்கேற்ற 8 ஆட்டங்களில் 5-ல் ராஜஸ்தான் வென்றுள்ளது. மேலும் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப், சென்னைக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் 3-வது இடத்தில் உள்ளது. எனவே பெங்களூர் அணியை வீழ்த்தி தங்கள் இடத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் ராஜஸ்தான் இப்போட்டியில் விளையாடும்.

அதே நேரத்தில் கோலி, யுவராஜ், கெயில் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் பெங்களூர் அணியால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x