Published : 12 Dec 2019 02:01 PM
Last Updated : 12 Dec 2019 02:01 PM

இந்திய அணியின் அச்சமற்ற ஆட்டத்துக்கு சவுரவ் கங்குலி பாராட்டு

மும்பையில் நடைபெற்ற கடைசி டி20 சர்வதேச போட்டியில் ராகுல், ரோஹித், கோலி மூவர் கூட்டணி மே.இ.தீவுகள் பந்து வீச்சை வெளுத்துக் கட்டினர். மூவரும் சேர்ந்து 16 சிக்சர்களை விளாசியதில் இந்திய அணி 240 ரன்கள் என்ற இமாலய ரன் எண்ணிக்கையை எட்டியது.

பவர் ஹிட்டிங் எங்களுடைய பாணி கிடையாது என்று கூறிக்கொண்டே மே.இ.தீவுகளை பிரமாதமாக திசைத் திருப்பிய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் கூற்றுக்கள் மும்பையில் நேற்று மே.இ.தீவுகள் கேப்டன் பொலார்டை டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்ய வைத்தது என்று கூற முடியும்.

முதலில் பேட் செய்யும் போது இதற்கு முன்பாக இந்திய அணி தயங்கும். பந்தை அடிக்கலாமா இல்லை ஒன்று இரண்டு என்று தேற்றி பிற்பாடு அடித்துக் கொள்ளலாமா என்ற இரட்டை மனநிலையில் தவித்ததையே பார்த்திருக்கிறோம்.

ஆனால் நேற்று முதல் பந்திலிருந்து கடைசி பந்து வரை ஆக்ரோஷம் காட்டியது இந்திய அணி. இந்த பயமற்ற அணுகுமுறையை பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான தாதா கங்குலி பாராட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது:

இந்தியா டி20 தொடரை இழந்து விடும் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே வெற்றி என்பது ஆச்சரியமானதல்ல. டி20 கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் இப்படித்தான் அச்சமின்றி அடித்து ஆடுகின்றனர், அதைத்தான் இந்திய அணியும் செய்தது. அச்சமின்றி விளையாடு, யாரும் இப்போது இந்திய அணியில் தங்கள் இடத்தைத் தக்க வைக்க ஆடவில்லை. வெற்றி பெறவே ஆடுகின்றனர். வெல் டன் இந்தியா, என்று கங்குலி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x