Published : 12 Dec 2019 08:41 AM
Last Updated : 12 Dec 2019 08:41 AM
மும்பையில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் டாப் 3 நட்சத்திரங்களான ரோஹித், ராகுல், கோலி வெளுத்து வாங்கியதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 240/3 என்று இமாயலய இலக்கை எட்டியது, தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 173/8 என்று தோல்வி தழுவியது. இதில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன, விராட் கோலி தன் அதிவேக டி20 அரைசதத்தை எடுத்ததும் இதில் ஒன்று.
விராட் கோலி 21 பந்துகளில் அரைசதம் கண்டார், மொத்தம் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் அவர் 70 ரன்களை விளாசினார். 21 பந்து அரைசதம் கோலியின் அதிவேக டி20 அரைசதமாகும். மொத்தத்தில் அதிவேக அரைசதம் எடுத்த 5வது வீரராகத் திகழ்கிறார் விராட் கோலி. இதற்கு முந்தைய 4 அதிவேக அரைசதங்களில் 3-ஐ யுவராஜ் சிங் எடுக்க ஒன்றை கவுதம் கம்பீர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் (71), ராகுல் (91), கோலி (70) ஆகிய 3 வீரர்கள் 70 ரன்களுக்கும் மேல் எடுத்திருப்பது டி20 வரலாற்றில் உலக அளவில் இதுவே முதல் முறை.
நேற்று எடுத்த 240/3 என்பது வான்கெடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கோர் என்பதோடு மூன்றாவது டி20 அதிகபட்ச ஸ்கோராகும்.
404 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா கிறிஸ் கெய்ல், ஷாகித் அஃப்ரீடி பட்டியலில் இணைந்ததோடு அதிவேக 400 சிக்சர்களுக்கும் சொந்தக்காரரானார்.
285 ரன்கள். கே.எல் ராகுல் வான்கெடேயில் கடைசி 3 டி20களில் எடுத்த ரன்களாகும்.
85.28. வான்கடேயில் டி20 கிரிக்கெட்டில் கோலியின் சராசரியாகும். 13 இன்னிங்ஸ்களில் 597 ரன்களை 5 அரைசதங்கள், 6 நாட் அவுட்டுகளுடன் எடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT