Published : 08 Dec 2019 08:14 PM
Last Updated : 08 Dec 2019 08:14 PM
" 1994-ம் ஆண்டு நியூஸிலாந்தில் சச்சின் டெண்டுல்கர் ஓபனிங் பேட்டிங் செய்வதை பார்ப்பதற்காகவே சண்டிகரில் இருந்து டெல்லிக்குச் சென்றேன். டெல்லியில் டி.வி. இருக்கும் நண்பர் வீட்டை தேடி அலைந்து. அதிகாலை 3 மணிக்குச் சச்சின் பேட்டிங்கை பார்த்தேன். எனக்கு சச்சின் மானசீக குரு"
சச்சின் குறித்து வீரேந்திர சேவாக் ஒருமுறை புகழ்ந்து பேசியது.
சேவாக் தன்னுடைய மானசீக குருவாக சச்சினை ஏற்றுக்கொண்டது என்னமோ உண்மையானது என்பதை அவரின் பேட்டிங் ஸ்டைல், ஷாட்கள் அனைத்திலும் கடைசிவரை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்.
இருவரும் ஒன்றாகத் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒரு நேரத்தில் களத்தில் நிற்கும் போது யார் பேட் செய்கிறார்கள் என்றே தெரியாமல் ரசிகர்கள் குழம்பிய சம்பவங்களும் உண்டு.
கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களுக்குரிய இலக்கணத்தை மாற்றி எழுதியது சேவாக்கின் பேட்டிங் என்றால் அது மிகையல்ல. களத்தில் சேவாக் நங்கூரமிட்டுவிட்டால், மதம் பிடித்த யானை போல் செயல்படுவார்.
தனகுக்கு எதிராகப் பந்துவீசுபவர் வேகப்பந்துவீச்சாளரா அல்லது சுழற்பந்து வீச்சாளரா என்பதையெல்லாம் சேவாக் பார்க்கமாட்டார். பந்துகள் பவுண்டரிக்கும், சிஸ்கருக்கும் பறக்கும் வகையில்தான் சேவாக்கின் ஆட்டம் இருக்கும்.
தொடக்க ஓவரை பந்துவீச வரும் பந்துவீச்சாளர் பல்வேறு கற்பனைகளுடன், விக்கெட்டை வீழ்த்தலாம், பல்வேறு வித்தைகள் காட்டலாம் என்று பந்துவீசுவார். ஆனால், பல பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை உடைத்து சேவாக் தூள் தூளாக்கி இருக்கிறார்.
யாரை மானசீக குருவாக நினைத்து கிரிக்கெட் கற்றுக்கொண்டாரோ அவரின் சாதனையை சேவாக் தகர்த்தால் அவருக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளித்திருக்கும். களத்திலும் சரி, கலைகளிலும் சரி குருவை மிஞ்சிய சிஷ்யன் இருப்பது குருவுக்குத்தான் பெருமை.
எதிரணிகளுக்கு சச்சின் டெண்டுல்கர் களத்தில் இருந்தால் எந்த அளவுக்கு அச்சுறுத்தல் இருக்குமோ அதே அளவுக்கு வீரேந்திர சேவாக் மீதும் இருந்தது. களத்தில் நின்றுவிட்டால், வீரேந்திர சேவாக்கை அவ்வளவு எளிதாக எதிரணியினர் ஆட்டமிழக்கச் செய்துவிட முடியாது.
அப்படிப்பட்ட ஒரு போட்டிதான் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி இந்தூரில் நடந்தது. இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே பகலிரவாக நடந்த அந்த போட்டியில்தான் சேவாக் அந்த சாதனையை நிகழ்த்தினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இது 4-வது ஒருநாள் போட்டியாகும்.
சேவாக் கேப்டன் பொறுப்பேற்று வழிநடத்திய அந்த போட்டியில் இந்திய அணியில் எந்த முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களும் இல்லை. வினய் குமார் ஒருவர் மட்டுமே இருந்தார்.
அஸ்வின், மிதுன், ராகுல் சர்மா, ரோஹித் சர்மா, ரெய்னா, ரவிந்திரஜடேஜா என சுழற்பந்துவீச்சாளர்களும், பகுதிநேரப் பந்துவீச்சாளர்களும் மட்டுமே இருந்தார்கள்.
இந்த போட்டியில் மே.இ.தீவுகள் அணியை 153 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெல்வதற்கு முக்கியக் காரணம் நிச்சயம் பந்துவீச்சாளர்கள் அல்ல, சேவாக்கின் அதிரடியாக பேட்டிங் மட்டுமே காரணம் என்பது உறுதிபடக் கூறலாம்.
மே.இ.தீவுகள் அணியிலும் கீமர் ரோச், ரஸல்,ராம்பால், நரேன்,சாமே, பொலார்ட், சாமுவேல்ஸ் என 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் சேவாக்கை 47 ஓவர்கள் வரை ஒன்றும் செய்யமுடியவில்லை.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. 419 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் சேவாக்கை ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் மே.இ.தீவுகள் பந்துவீ்ச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தது பார்க்கவே பரிதாபமாக இருந்தது
தொடக்க வீரராக களமிறங்கி களத்தில் நங்கூரமிட்ட சேவாக் 149 பந்துகளில் 219 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 25 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடக்கம். 146 ஸ்ட்ரைக் ரேட் சேவாக் வைத்திருந்தார்.
சேவாக்கின் அதிரடி ஆட்டம், இந்திய அணியின் ஸ்கோர் இதைப் பார்த்து மனரீதியாகவே மே.இ.தீவுகள் வீரர்கள் சோர்ந்துவிட்டார்கள்.
தொடக்க வீரர்களாக கம்பீர், சேவாக் களமிறங்கினர். தொடக்கத்தில் சேவாக் மிகவும் நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தார். 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தோற்க, சுனில் நரேன் முக்கியக் காரணமாக அமைந்திருந்தார்.
ஆனால், இந்த போட்டியில் சுனில் நரேன் பந்துவீச்சில் இருந்து சேவாக் தனது அதிரடியைத் தொடங்கினார். நரேன் வீசிய11-வது ஓவரில் லாங்-ஆனில் சிக்ஸரை பறக்கவிட்டு தனது அதிரடியைத் தொடங்கினார்.
41 பந்துகளில் சேவாக் அரைசதம் அடித்தார். அதன்பின் சேவாக் அதிரடியில் அரங்கமே அதிர்ந்தது. பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தன.
அரைசதம் அடிக்க 41 பந்துகள் எடுத்த சேவாக், அடுத்த 50 ரன்களை சேர்க்க 28 பந்துகள் மட்டுமே எடுத்தார். 69 பந்துகளில் சதம் அடித்தார். அதன்பின் சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
112 பந்துகளில் 150 ரன்களை சேவாக் எட்டினார். சேவாக் 170 ரன்கள் சேர்த்திருந்தபோது அவரை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க டேரன் சாமேவுக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். இதை பயன்படுத்திய சேவாக் ருத்ரதாண்டவம் ஆடினார்.
சேவாக் 197 ரன்களை எட்டியபோது, அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து வீரு, வீரு என்று முழக்கமிட்டு, அதிரவைத்தனர். ரஸல் வீசிய ஓவரில் ஒருபவுண்டரி அடித்து சேவாக் 140 பந்துகளில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். உலக அளவில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2-வதுவீரர் எனும் சாதனையை சேவாக் படைத்தார்.
சேவாக் இரட்டை சதம் அடித்ததும், எதிர்முனையில் இருந்த ரோஹித் சர்மா ஓடிவந்து கைகொடுத்துக் கட்டி அணைத்தார். மே.இ.தீவுகள் வீரர்களும் கைகொடுத்து வாழ்த்தினர்.
அதன்பினும் சேவாக் சிக்ஸர், பவுண்டரி அடித்து 219 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை சேவாக் பதிவு செய்து வெளியேறினார். சச்சினின் சாதனையையும் சேவாக் முறியடித்தார்
சேவாக்குடன் தொடக்க வீரராக களமிறங்கிய கம்பீர் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த ரெய்னா 55 ரன்களில் வெளியேறினார். சேவாக், ரெய்னா கூட்டணி 140 ரன்கள் சேர்த்தனர்.
மே.இ.தீவுகள் தரப்பில் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசினார்கள். அனைவரும் சராசரியாக 8 முதல் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். அதிகபட்சமாக கீமர் ரோச் 10 ஓவர்கள் வீசி 88 ரன்கள் வாரி வழங்கினார்.
419 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்கு மே.இ.தீவுகள் வீரர்களின் மனஉறுதியை குலைத்துவிட்டது. இதை எப்படி சேஸிங் செய்யப் போகிறோம் என்ற எண்ணமே அவர்களை உலுக்கிவிட்டது.
மே.இ.தீவுகள் அணியில் விக்கெட் கீப்பர் ராம்தின் அதிகபட்சமாக 96 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சிம்மன்ஸ் (33) வெல்(7),சாமுவேல்ஸ்(33), ரஸல்(29) என சொற்ப ரன்களில் வெளியேறினர். 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு மே.இ.தீவுகள் அணிஆட்டமிழந்து 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய அணித் தரப்பில் ஜடேஜா, ராகுல் சர்மா தலா 3 விக்கெட்டுகளையும், ரெய்னா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது சேவாக்கிற்கு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT