Published : 07 Aug 2015 05:02 PM
Last Updated : 07 Aug 2015 05:02 PM
இந்திய அணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கை, இந்திய அணிகள் டெஸ்ட் மட்டத்தில் 2011-க்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரே நிலையில்தான் உள்ளது. இதில் சிறந்த டெஸ்ட் அணியாக பாகிஸ்தானே உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மே, 2011-க்குப் பிறகு இந்தியா, இலங்கை இரண்டு அணிகளுமே 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளன. இதில் இந்தியா 13-ல் வென்று 17-ல் தோல்வி கண்டுள்ளது. இலங்கை அணி 11-ல் வென்று 16-ல் தோல்வி தழுவியது.
ஆனால் இதே காலக்கட்டத்தில் பாகிஸ்தான் 17 டெஸ்ட்களில் வென்று 12-ல் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.
அயல்நாட்டு மண்ணில் வெற்றி என்ற தீரா ஆசையை எடுத்துக் கொண்டால், இதே 4 ஆண்டுகளில் 25 அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-ல் மட்டுமே வென்றுள்ளது. ஒன்று பரிதாப மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக மற்றொன்று லார்ட்ஸில் பெற்ற அந்த பிரசித்தியான வெற்றி.
இலங்கை அணி 21 அயல்நாட்டு டெஸ்ட்களில் 4-ல் வென்று, 10-ல் தோல்வி தழுவியுள்ளது. எனவே இரு அணிகளுக்கும் அயல்நாட்டு வெற்றி என்பது எட்டாக்கனியே. ஆனால் தென் ஆப்பிரிக்காவில், இங்கிலாந்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயல்நாட்டில் அஜிங்கிய ரஹானேயின் உயர் சராசரி:
அணிகளின் நிலைமை இவ்வாறு இருக்கிறது என்றால் இந்திய பேட்ஸ்மென்களில் அஜிங்கிய ரஹானே மட்டுமே அயல்நாடுகளில் சிறந்து விளங்குகிறார். இவர் ஒரு போட்டியில்தான் உள்நாட்டில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அயல்நாடுகளில் இவர் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சதம் எடுத்ததோடு தென் ஆப்பிரிக்காவில் 96 ரன்களை அடித்துள்ளார். இதன் மூலம் இவரது அயல்நாட்டு டெஸ்ட் சராசரி 50.73 என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இன்று ஆஸ்திரேலியா திணறும் இங்கிலாந்து டிரெண்ட் பிரிட்ஜ் பிட்சோ, அல்லது அதற்கு முந்தைய எட்ஜ்பாஸ்டன் பிட்சோ, ரஹானே சதம் அடித்த லார்ட்ஸ் முதல் நாள் பிட்சை விட அபாயகரமானது அல்ல என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும், அன்று லார்ட்ஸில் இவர் அடித்த சதமே இந்திய அணிக்கு வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
விராட் கோலி, விஜய் ஆஸ்திரேலியாவில் அபாரமாக ஆடினர். இங்கிலாந்தில் விராட் கோலியின் பார்ம் படுமோசம். ஆனாலும் இவர்கள் பரவாயில்லை.
ஷிகர் தவண், புஜாரா, ரோஹித் சர்மா நிலைமை படுமோசமாக உள்ளது. தவானின் அயல்நாட்டு பேட்டிங் சராசரி 35, அதாவது வங்கதேசத்துக்கு எதிராக அடித்த 173 ரன்களினால் பரவாயில்லை போல் தெரிகிறது. இது இல்லையெனில் 20 அயல்நாட்டு இன்னிங்ஸ்களில் இவரது சராசரி 29-ஐ தாண்டவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. புஜாரா அயல்நாட்டு சராசரி 24 இன்னிங்ஸ்களில் 32க்கும் குறைவு. ரோஹித் சர்மாவும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
இலங்கையில் இந்திய பேட்ஸ்மென்களை எடுத்துக் கொண்டால் 2000-ம் ஆண்டிலிருந்து பார்த்தால் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 44.09 என்ற சராசரி வைத்துள்ளார், ராகுல் திராவிட், கங்குலி உட்பட யாரும் இங்கு அதிகம் சோபித்ததில்லை.
எனவே இந்த இலங்கை தொடர் புள்ளிவிவர நோக்கில் இந்திய அணிக்கு சவாலாக அமையும் என்று தெரிகிறது, ஆனால் இலங்கை அணியின் சமீபத்திய பார்ம் பாகிஸ்தானுக்கு எதிராக அம்பலமாகியுள்ளதால், பாகிஸ்தான் ஆடிய அதே தீவிரத்துடன் இந்தியா ஆடினால் ஒருவேளை ஒரு அரிய அயல்நாட்டு டெஸ்ட் தொடர் வெற்றி சாத்தியமாகலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT