Published : 05 Dec 2019 12:16 PM
Last Updated : 05 Dec 2019 12:16 PM
ஹிட்மேன் என்று நெட்டிசன்களால் செல்லமாக அழைக்கப்படும் ரோஹித் சர்மா தன் மட்டையை இன்னும் ஒரு வீசு வீசி பந்து சிக்கி மைதானத்தின் கூரையைத் தொட்டால் கெய்ல், அப்ரீடி சாதனை வரிசையில் அடுத்த வீரராக மைல்கல்லில் இணைவார்.
நாளை (டிச. 6) மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா இன்னும் ஒரேயொரு சிக்சரை அடித்தாரானால் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் 400 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டி விடுவார்.
மொத்தம் 534 சர்வதேச கிரிக்கெட் சிக்சர்களுடன் கெய்ல் முதலிடம் வகிக்க, மொத்தம் 476 சர்வதேச கிரிக்கெட் சிக்சர்களுடன் ஷாகித் அஃப்ரீடி 2ம் இடத்தில் இருக்கிறார், அடுத்ததாக இன்னும் ஒரு சிக்சரை அடித்தால் 400 சிக்சர்கள் மைல்கல்லுடன் ரோஹித் சர்மா இந்த உயர்மட்ட பட்டியலில் இணைவார்.
சமீபத்தில் இவரை டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிறக்கும் மாஸ்டர் ஸ்ட்ரோக் முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுக்க அவரும் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க பெரிய அளவில் ஆடி வருகிறார், டெஸ்ட் போட்டிகளிலும் சிக்சர்களை பறக்க விடும் வீரராகத் திகழ்கிறார் ரோஹித் சர்மா.
சமீபத்தில் முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 529 ரன்களை விளாசிய ரோஹித் சர்மா தொடக்க வீரராக முதல் ஆட்டத்திலேயே இரட்டைச் சத சாதனையை நிகழ்த்தினார்.
மேலும் இதே தொடரில் 19 சிக்சர்களை விளாசி ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரரானார்.
இப்போது மே.இ.தீவுகளுடன் நாளை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடங்குகிறது, இது முடிந்ததும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. இதில் ரோஹித் சர்மா பல சாதனைகளை முறியடிப்பார் என்று ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT