Published : 02 Dec 2019 04:40 PM
Last Updated : 02 Dec 2019 04:40 PM
நேபாளத்தில் நடந்து வரும் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதல் நாளான இன்று இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது.
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 13-வது தெற்காசியப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள், பூடான்,நேபாளம் ஆகிய7 நாடுகளின் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த உள்ளனர். 26 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 2,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 15 விளையாட்டுப் பிரிவுகளில் 487 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.
இன்று நடந்த ஆடவர்களுக்கான டிரையத்லான் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது. இந்தியாவின் ஆதர்ஷா எம்என் சினிமோல் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார். சக இந்திய வீரர் பிஷ்வோர்ஜித் ஸ்ரீகோம் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளி வென்றார்.
மகளிருக்கான ஒற்றையர் டிரையத்லான் பிரிவில் இந்தியாவின் தோடம் சரோஜினி தேவி வெள்ளியையும், மோகன் பிரக்யன்யா வெண்கலமும் வென்றனர்.
தனிநபர் டிரையத்லான் பிரிவில் 750 மீட்டர் நீச்சல், 20 கி.மீ. சைக்கிள் பந்தயம், 5 கி.மீ. ஓட்டம் ஆகியவை அடங்கியிருக்கும். இந்த 3 பிரிவையும் முடித்து முதலில் வரும் வீரர், வீராங்கனை முதலிடம் பெறுவார்.
இதில் இந்திய வீரர் சினிமோல் ஒருமணி, 2 நிமிடங்கள் 51 வினாடிகளில் வந்து தங்கம் வென்றார். பிஷ்வோர்ஜித் ஒருமணி 2 நிமிடங்கள் 59 வினாடிகளில் தொலைவைக் கடந்து வெள்ளியையும், நேபாள வீரர் பசந்தா தாரு வெண்கலத்தையும் வென்றனர்.
மகளிர் தனிப்பிரிவில் இந்தியாவின் சரோஜினி ஒருமணி நேரம் 14 நிமிடத்தில் வந்து வெள்ளியையும், நேபாள வீராங்கனை சோனி குருங் ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் 45 வினாடிகளில் வந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்திய வீராங்கனை பிரக்யா ஒருமணிநேரம் 14 நிமிடங்கள் 57 வினாடிகளில் வந்து வெண்கலம் வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT