Published : 27 Aug 2015 10:10 AM
Last Updated : 27 Aug 2015 10:10 AM
சீனாவில் நடைபெற்று வரும் 15-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ் பிரிவில் கென்ய வீராங்கனை ஜெப்கெமோய் தங்கம் வென்றார்.
5-வது நாளான நேற்று நடந்த இந்தப் போட்டியில் ஜெப்கெமோய் 9 நிமிடம், 19.11 விநாடிகளில் இலக்கை எட்டினார். டுனீசிய வீராங்கனை ஹபிபா கிரிப்பியால் (9:19.24) இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவர் வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேறினார். இதேபிரிவில் ஜெர்மனி வீராங்கனை ஜெஸா பெலிஸிடஸ் (9:19.25) வெண்கலம் வென்றார்.
400 மீ. ஓட்டம்
ஆடவர் 400 மீ. ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் வான் நிகெர்க் 43.48 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் அதிவேக ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
நடப்பு சாம்பியனான அமெரிக்கா வின் லாஷன் மெரிட்டுக்கு (43.64 விநாடிகள்) வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. கிரேனாடாவைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான கிரானி ஜேம்ஸ் (43.79 விநாடிகள்) வெண்கலப் பதக்கம் வென்றார்.
400 மீ. தடை தாண்டுதல்
மகளிர் 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான செக்.குடியரசின் ஜுஜானா ஹெஜ்னோவா 53.50 விநாடிகளில் இலக்கை தட்டி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். அமெரிக்க வீராங்கனைகள் ஷேமியர் லிட்டில் (53.94) வெள்ளியும், கஸான்ட்ரா டேட் (54.02) வெண்கலமும் வென்றனர்.
ஈட்டி எறிதல்
ஆடவர் ஈட்டி எறிதலில் கென்ய வீரர் ஜூலியஸ் ஏகோ தனது 3-வது முயற்சியில் 92.72 மீ. தூரம் ஈட்டி எறிந்து தங்கத்தை தட்டிச் சென்றார். எகிப்தின் இஹாப் அப்டெல்ரஹ்மான் (88.99 மீ. தூரம்) வெள்ளியும், பின்லாந்தின் டெரோ பிட்காம்கி (87.64 மீ. தூரம்) வெண்கலமும் வென்றனர். நடப்பு சாம்பியனான செக்.குடியரசின் விடெஸ்லாவ் வெஸ்லே 8-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.
92.72 மீ. தூரம் எறிந்ததன் மூலம் அதிக தூரம் ஈட்டி எறிந்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் ஏகோ. ஈட்டி எறிதலில் உலக சாதனை இன்றளவும் செக்.குடியரசின் ஜான் ஸெல்னியிடமே உள்ளது. அவர் 1996-ல் அட்லாண்டா ஒலிம்பிக்கில் 98.48 மீ. தூரம் ஈட்டி எறிந்தார். இதேபோல் உலக சாம்பியன்ஷிப் சாதனையும் அவர் வசமே உள்ளது. 2001-ல் எட்மான்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் அவர் 92.80 மீ. தூரம் ஈட்டி எறிந்துள்ளார்.
கம்பு ஊன்றித் தாண்டுதல்
மகளிர் கம்பு ஊன்றித் தாண்டுதல் போட்டியில் கியூபாவின் யாரிஸ்லே சில்வா 4.90 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றார். இதேபிரிவில் பிரேசிலின் பேபியானா முரர் (4.85 மீ.) வெள்ளியும், கிரீஸின் நிகோலெட்டா (4.80 மீ.) வெண்கல மும் வென்றனர்.
கென்ய வீராங்கனைகள் சஸ்பெண்ட்
உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் கென்ய வீராங்கனைகள் கோகி மனுங்கா, ஜாய்ஸ் ஜகாரி ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை நடை பெற்ற மகளிர் 400 மீ. ஓட்டத்தின் முதல் சுற்றில் ஜகாரி 50.71 விநாடி களில் இலக்கை எட்டி தேசிய சாதனை படைத்தார். அதேநேரத் தில் மனுங்கா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 400 மீ. தடை தாண்டு தல் ஓட்டத்தில் 58.96 விநாடிகளில் இலக்கை எட்டி 35-வது இடத்தைப் பிடித்ததால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT