Last Updated : 27 Nov, 2019 09:44 PM

3  

Published : 27 Nov 2019 09:44 PM
Last Updated : 27 Nov 2019 09:44 PM

என்னால் வாழ்க்கையில் இரு விஷயங்களை மறக்கவே முடியாது: தோனி உருக்கமான பேச்சு

எம்.எஸ்.தோனி : கோபுப்படம்

மும்பை

என் வாழ்க்கையில் ரசிகர்கள் அளித்த வரவேற்பில் இரு விஷயங்களை என்னால் மறக்கவே முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இன்று தனியார் நிறுவனம் சார்பில் கைக்கடிகாரம் அறிமுக விழா நடந்தது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 2 மாடல் கைக்கடிகாரங்களை அறிமுகம் செய்தார்.

அப்போது தனது தலைமையில் 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற தருணத்தை அவர் நினைவுகூர்ந்து மிகவும் உருக்கமாகப் பேசினார். அதிலும் கோப்பையை வென்று மும்பைக்கு வந்தபோது ரசிகர்கள் அளித்த வரவேற்பையும், அன்பையும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ரசிகர்களின் செயலையும் தோனி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தோனி பேசியதாவது:

''என் கிரிக்கெட் வாழ்க்கையில் இரு நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது. கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியில் கோப்பையை வென்று நாங்கள் நாடு திரும்பினோம். அப்போது திறந்தவெளிப் பேருந்தில் மும்பை நகரைச் சுற்றி வந்தோம். அப்போது அனைத்து மக்களும் எங்களைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்தியதையும், பாராட்டியதையும் என்னால் மறக்க முடியாது.

அனைத்து ரசிகர்கள், மக்கள் முகத்திலும் புன்னகையைக் கண்டேன். மும்பை கடற்கரைப் பகுதியில் நாங்கள் வந்தபோது ஏராளமான கூட்டம், போக்குவரத்து முடங்கியது. ஏராளமானோர் பணிக்குச் செல்பவர்கள், விமானம், ரயில் நிலையம் செல்பவர்கள் அனைவரும் அந்தப் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்கள். ஆனால் ஒருவர் கூட வருத்தப்படாமல் அனைவரின் முகத்திலும் புன்னகைதான் இருந்தது.

இரண்டாவது சம்பவம் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். கடைசி நேரத்தில் வெற்றிக்கு 15 முதல் 20 ரன்கள் தேவைப்பட்டது. மும்பை வான்ஹடே அரங்கில் அமர்ந்திருந்த அனைத்து ரசிகர்களும் வந்தே மாதரம் பாடலை ஒட்டுமொத்தமாகப் பாடத் தொடங்கினார்கள். அந்த வினாடி என் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த இரு நிகழ்வுகளைப்போல் மீண்டும் நிகழுமா என்பது கடினம். என் மனதில் இந்த இரு சம்பவங்களும் நீங்காமல் இருக்கின்றன.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை உறுதியில்லாத் தன்மை மற்ற போட்டிகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பந்துவீச்சாளர் பந்துவீசும்போது போட்டி மாறிக்கொண்டே இருக்கும், மாற்றம் வந்துகொண்டே இருக்கும். என்னைப் பொறுத்தவரை டி20 போட்டியில் ஒவ்வொரு பந்தும் ஆட்டத்தை மாற்றி அமைக்கக்கூடிய பந்தாகும்.

கிரிக்கெட்டில் நாம் எப்போதும் புதிதாக சிந்தித்துச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதைத் தக்கவைக்க வேண்டும். அதாவது பேட்டிங்கில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவதைப் போன்று. இதுபோன்ற பேட்டிங் வழக்கத்தில் இல்லை என்றாலும் 15 ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால் இதுபோன்ற ஆட்டம் இல்லை. ஆனால் இப்போது பேட்ஸ்மேன்கள் வித்தியாசமாக பேட் செய்து ரசிகர்களைக் கவர்கிறார்கள். இதனால்தான் இந்திய அணி வெற்றிகரமாக இருந்து வருகிறது.

நான் சிறிய மாநிலமான ஜார்க்கண்டில், ராஞ்சி என்ற சிறிய நகரில் இருந்து வந்தேன். என்னுடைய வாழ்க்கையில் கடந்த 2003-ம் ஆண்டு வரை மேடு, பள்ளங்கள், ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால், இந்தியா ஏ அணியில் பயணம் செய்தபின்தான் என் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

தனி மனிதர்கள் தங்களின் தனிப்பட்ட மனவலிமை, பலவீனம் ஆகியவை குறித்து நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். எவ்வாறு இந்த திறமைகளை வளர்த்துக் கொள்வது, எவ்வாறு முயற்சிகள் எடுப்பது போன்றவற்றை அறிய வேண்டும்''.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x