Published : 27 Nov 2019 06:34 PM
Last Updated : 27 Nov 2019 06:34 PM
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் நடக்கும் இடங்களை மாற்றி பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. போட்டிகள் நடக்கும் இடங்களையும், தேதிகளையும் பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில் தற்போது மாற்றம் செய்துள்ளது.
ஏற்கெனவே அறிவித்த பட்டியலின்படி, டிசம்பர் 6-ம் தேதி மும்பையில் முதல் டி20 போட்டியும், டிசம்பர் 8-ம் தேதி திருவனந்தபுரத்தில் 2-வது போட்டியும், டிசம்பர் 11-ம் தேதி ஹைதராபாத்தில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியும் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம், மற்றும் டாக்டர் அம்பேத்கரின் மகாபரி நிர்வான் தினமும் வருவதால் போட்டிக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மும்பை போலீஸார் பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்துவிட்டனர்.
மும்பையில் உள்ள தாதர் பகுதியில் இருக்கும் சைதயாபூமியில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்துக்கு லட்சக்கணக்கிலான தொண்டர்கள் வருவார்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீஸார் உள்ளனர். மேலும் பாபர் மசூதி இடிப்பு நாளில் மும்பையில் போலீஸார் கூடுதல் பாதுகாப்புடன் எப்போதும் இருப்பார்கள் என்பதால் போட்டியை பிசிசிஐ மாற்றியது.
இதன்படி மும்பையில் நடக்கும் முதலாவது டி20 போட்டி மூன்றாவது போட்டியாகவும், ஹைதராபாத்தில் நடக்கும் 3-வது போட்டி முதல் போட்டியாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "டிசம்பர் 6-ம் தேதி மும்பையில் நடைபெற இருந்த இந்தியா, மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாறாக ஹைதராபாத்தில் 11-ம் தேதி நடக்க இருந்த 3-வது டி20 போட்டி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment