Published : 27 Nov 2019 02:09 PM
Last Updated : 27 Nov 2019 02:09 PM
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு கை விரல்களில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நியூஸிலாந்துக்கு எதிரான தொடருக்குள் உடல்நலம் தேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.
முதலுதவி சிகிச்சை சாஹாவுக்கு அளிக்கப்பட்ட நிலையில், அதன்பின் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அவரின் விரல்களில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் விருத்திமான் சாஹாவுக்கு இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், "பிசிசிஐ அமைப்பின் மருத்துவக் குழுவில் உள்ள கைமணிக்கட்டு நிபுணர் உதவியுடன், விருத்திமான் சாஹாவின் கை விரல்களில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சாஹா சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் குணமடைந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்குத் திரும்புவார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்திய அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், "பிப்ரவரி 14-ம் தேதி நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. வெலிங்டன், கிறிஸ்ட் சர்ச் நகரில் இந்த இரு டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக ஹேமில்டனில் 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஜனவரி மாதத்தில் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. ஆதலால், டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பாக சாஹா தனது காயத்தில் இருந்து குணமடைந்துவிடுவார் என வாரியம் நம்புகிறது" எனத் தெரிவித்தன.
2018-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் தோள்பட்டை காயம் காரணமாக சிகிச்சையில் இருந்த சாஹா, அக்டோபர் மாதம் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார்.
காயம் காரணமாக சாஹா ஓய்வில் சென்றபின் டெஸ்ட் போட்டிக்கு ரிஷப் பந்த்தை தயார் செய்யும் முனைப்பில் தேர்வுக் குழுவினர் இறங்கினர். ஆனால், சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாகச் செயல்பட்ட ரிஷப் பந்த் பெரும்பாலான போட்டிகளில் ஏமாற்றம் அளித்தார். இந்த சூழலில்தான் அனுபவம் வாய்ந்த சாஹா மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டார்.
கடந்த வாரம் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியின்போதுதான் சாஹா டெஸ்ட் போட்டிகளில் 100 கேட்ச்சுகளைப் பிடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு டெஸ்ட் தொடர் ஏதும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT