Last Updated : 23 Nov, 2019 04:37 PM

 

Published : 23 Nov 2019 04:37 PM
Last Updated : 23 Nov 2019 04:37 PM

பாண்டிங் சாதனையை சதத்தால் உடைத்த கோலி; வலுவான முன்னிலையோடு இந்திய அணி: வங்கம் போராட்டம்

சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி : படம் உதவி ட்விட்டர்

கொல்கத்தா

கொல்கத்தாவில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் சதத்தால் வலுவான முன்னிலையை நோக்கி இந்திய அணி நகர்ந்துள்ளது.

இந்தியா 87 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் சேர்த்துள்ளது. வங்கதேச அணியைக் காட்டிலும் 224 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

களத்தில் சாஹா 13 ரன்களில் உள்ளனர். கேப்டன் விராட் கோலி 136 ரன்களிலும், ரஹானே 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். .

முதல் டெஸ்ட் போட்டியில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த விராட் கோலி, இந்தப் போட்டியில் விஸ்ரூபமெடுத்து பேட் செய்து வருகிறார். அபாரமாக ஆடிய விராட் கோலி, டெஸ்ட் போட்டியில் தனது 27-வது சதத்தையும், கேப்டனாக 20-வது சதத்தையும் நிறைவு செய்தார்.

ஈடன் கார்டன் மைதானத்தில் கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்திருந்தார். அதன்பின் 2 ஆண்டுகள் இடைவெளியில் இப்போது சதம் அடித்துள்ளார்.

இவருக்குத் துணையாக பேட் செய்த துணை கேப்டன் ரஹானே தொடர்ந்து 4-வது முறையாக அரை சதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோமினுள் ஹக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களில் வங்கதேசம் ஆட்டமிழந்தது.

அதன்பின் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில், 46 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. கோலி 59 ரன்களிலும், ரஹானே 23 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இன்று ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

தொடக்கத்தில் இருந்து நிதானமாக இருவரும் பேட் செய்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருவரும் கூட்டாக விளையாடிய அனுபவம் இருப்பதால், நிதானமாக பேட் செய்தார்கள். 65 பந்துகளில் ரஹானே தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

தைஜுல் இஸ்லாம் பந்தில் 2 ரன்கள் சேர்த்தபோது விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது 27-வது சதத்தை நிறைவு செய்தார். இது கேப்டனாக கோலி அடித்த 20-வது சதமாகும். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை கோலி உடைத்துள்ளார்.

பாண்டிங் சாதனை முறியடிப்பு

ரிக்கி பாண்டிங் கேப்டனாக 19 சதங்கள் அடித்திருந்தார். அதை உடைத்த கோலி கேப்டனாக 20-வது சதத்தை நிறைவு செய்தார்.முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 25-வது இடத்தில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக விராட் கோலி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் ஆகியவற்றில் தனது 70-வது சதத்தை கோலி அடித்துள்ளார். மேலும், விராட்கோலி 32 ரன்கள் சேர்த்தபோது, கேப்டனாகப் பதவியேற்று 5 ஆயிரம் ரன்களை நிறைவு செய்தார்.

இதன் மூலம், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை உடைத்த கோலி, இந்திய அளவில் கேப்டனாக டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

குறிப்பாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு ஏற்று கோலி 41 சதங்களை அடித்து, ரிக்கி பாண்டிங் 41-வது சதத்தை நிறைவு செய்தார்.

விராட் கோலி சதம் அடித்தபின் ரன் சேர்ப்பில் வேகம் காட்டினார். அபுஜயித் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்து விளாசினார்.

தஜ்ஜுல் இஸ்லாம் வீசிய பவுன்ஸரில் ரஹானே 51 ரன்கள் சேர்த்திருந்தபோது, இபாதத் ஹூசைனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த ஜடேஜா, கோலியுடன் சேர்ந்தார். இந்த ஜோடி நீண்டநேரம் நிலைக்கவில்லை. அபு ஜயித் பந்துவீச்சில் போல்டாகி ஜடேஜா 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாஹா, கோலியுடன் சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலி ஆட்டமிழந்தார்.

இபாதத் ஹூசைன் வீசிய பந்தை பவுண்டரிக்குத் தூக்கி அடிக்க கோலி முயன்று தஜுல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கோலி 194 பந்துகளில் 136 ரன்கள் சேர்த்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும்.

, அஸ்வின் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். வங்கதேசம் தரப்பில் இபாதத் ஹூசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x