Published : 22 Nov 2019 01:15 PM
Last Updated : 22 Nov 2019 01:15 PM
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக நடந்துவரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகலிரவு டெஸ்ட் போட்டி, பிங்க் நிறப் பந்தில் இன்று தொடங்குகிறது.
உலகில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பெரும்பாலான அணிகள் பிங்க் நிறப் பந்தில் விளையாடும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டன. ஆனால், இதுவரை இந்தியா, வங்கதேசம் அணிகள் மட்டுமே விளையாடாமல் இருந்த நிலையில், இப்போது களம் காண்கின்றன.
இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட போட்டியில் இந்தூரில் நடந்த போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. கொல்கத்தாவில் இன்று 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடக்கிறது.
இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள்தான் இந்தப் போட்டியிலும் விளையாடுகிறார்கள்.
வங்கதேச அணியில் அல் அமின், தொடக்க ஆட்டக்காரர் நயிம் அழைக்கப்பட்டுள்ளனர். தைஜுல், மெஹதி நீக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளும் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் ரசிகர்கள் இதைக் காண ஆர்வமாக இருக்கின்றனர்.
வங்கதேச கேப்டன் மோமினுள் ஹக், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் போடும் நிகழ்வில் பங்கேற்றனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி என்பதால், டாஸ் போடுவதற்கு தங்கக் காசு பயன்படுத்தப்பட்டது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோமினுள் ஹக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதலில் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையும், அதைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு இரு அணிகளின் வீரர்களையும் அந்தந்த அணியின் கேப்டன்கள் அறிமுகம் செய்து வைக்கின்றனர்
அதைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மணியடித்து போட்டியைத் தொடங்கி வைக்கின்றனர். பிசிசிஐ தலைவர் கங்குலி, சச்சின், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் நஜ்முல் ஹசன் உடன் இருப்பார்கள்.
இதைத் தொடர்ந்து 3 மணி அளவில் உணவு இடைவேளையில் சச்சின், கங்குலி, கும்ப்ளே, திராவிட், லட்சமண் ஆகியோரி கலகலப்பு கலந்துரையாடல் நடக்கும்.
ஆடுகளம் எப்படி?
ஈடன்கார்டன் ஆடுகளத்தில் அதிகமான அளவு புற்கள் இருக்கின்றன. குறைந்தபட்சம் 5 மி.மீ. அளவுக்கு புற்கள் இருப்பதால், ஆடுகளம் சற்று இறுக்கமாக இருக்கிறது. இதனால், பந்துவீச்சாளர்களுக்கு, குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தொடக்கத்தில் ஒத்துழைக்கும். ஆனால் நேரம் செல்லச் செல்ல பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்போது, பந்துவீச்சாளர்களால் பந்தைப் பிடித்து வீசுவதில் அதிகமான சிரமம் இருக்கும். துல்லியத் தன்மை தவறும். பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்வதிலும், சீராக வீசுவதிலும் சிரமம் ஏற்படும். சுழற்பந்துவீச்சாளர்களால் பந்தைத் திருப்பிவிடுவதில் கஷ்டம் இருக்கும். இதைப் பயன்படுத்தி பேட் செய்யும் அணி அதிகமான ரன்களை அடிக்க முடியும்.
அதிலும் பிங்க் பந்து வழக்கமான சிவப்பு பந்தைக் காட்டிலும் அளவிலும், எடையிலும் அதிகமாக இருப்பதால் பந்து வீசுவதில் சிரமம் இருக்கும். ஃபீல்டிங் செய்வதிலும், பந்தை எறிவதிலும், இரவு நேரத்தில் பிடிப்பதிலும் ஃபீல்டர்களுக்கு சிக்கல் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT