Published : 22 Nov 2019 12:00 PM
Last Updated : 22 Nov 2019 12:00 PM
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியைத் தொடங்கி வைக்கப்போகும் முக்கிய விஐபி, பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. பங்க் பந்தில் நடத்தப்படும் இந்த டெஸ்ட் போட்டியில் இதுவரை இந்திய அணியும், வங்கதேச அணியும் விளையாடியது இல்லை என்பதால், இரு அணிகள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா ஈடன்கார்டன் கார்டன் மைதானத்தில் நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டியைக் காண அரங்கு நிறைய ரசிகர்கள் குவியப் போகிறார்கள். முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன என்பதால், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருவார்கள் எனத் தெரிகிறது.
ஈடன்கார்டன் மைதானம் முழுமையும், பிங்க் நிறமாக இருக்கும் வகையில் கொடிகள், ரசிகர்களுக்கு பிங்க் நிற ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.
வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் பந்துவீசுவதற்குப் பயன்படுத்தப்படும் பிங்க் நிறப் பந்தை பாராசூட்டில் வந்து ராணுவ வீரர்கள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பாராசூட்டில் மைதானத்துக்குள் வந்து பிங்க் பந்தைக் கொடுத்தபின் போட்டி தொடங்கும் என்று திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், பாதுகாப்பு ஒப்புதல் கிடைக்காததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தப் போட்டிக்கு வருவதாக முதலில் தெரிவித்திருந்தார். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரின் வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பகலிரவு டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளையின்போது, ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், அணில் கும்ப்ளே, விவிஎஸ் லட்சுமண், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோர் கலந்து பேசும் இனிமையான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர சடகோபன் ரமேஷ், சபா கரீம், சுனில் ஜோஷி, அஜித் அகர்கர், வெங்கடேஷ் பிரசாத், கபில் தேவ், திலிப் வெங்சர்கார், முகமது அசாருதீன், கிருஷ்ணாச்சாரி ஸ்ரீகாந்த், பரூக் இன்ஜினீயர், சந்து போர்டே ஆகிய முன்னாள் வீரர்கள் வருகை தருகின்றனர்.
இதுதவிர தடகளப் போட்டி வீரர், வீராங்கனைகளான அபினவ் பிந்த்ரா, பி.கோபிசந்த், பி.வி.சிந்து, சானியா மிர்ஸா, மேரிகோம், விஸ்வநாதன் ஆனந்த், மார்க்ஸ் கார்ல்ஸன் ஆகியோர் வருகின்றனர்.
மேலும், வங்கதேசத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்களான நைமுர் ரஹ்மான், முகமது ஹசன், மஹரப் ஹுசைன், முகமது ஹசிபுல் ஹுசைன், ஷாரியார் ஹூசைன் பிதுத், காஜி ஹபிபுல் பாஸர், முகமது அக்ரம் கான் ஆகியோரும் வருகின்றனர்.
தொடக்க விழாவை ரூனா லைலா மற்றும் பாப் இசைப் பாடகர் ஜீத் கங்குலி ஆகியோரின் நடன, இசை நிகழ்ச்சியுடன் போட்டி தொடங்குகிறது. பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியும் இதில் பங்கேற்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT