Published : 20 Nov 2019 04:06 PM
Last Updated : 20 Nov 2019 04:06 PM
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 2019-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா தேர்வு செய்துள்ளது. அவருக்கு விரைவில் விருது வழங்க உள்ளது.
பீட்டா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
விலங்குகள் மீதும் அளவற்ற பாசமும், நேசமும் விராட் கோலி வைத்துள்ளார். சமீபத்தில் அமர் கோட்டையில் ஒரு யானையை 8 பேர் கொண்ட குழு துன்புறுத்தியதைப் பார்த்த விராட் கோலி, உடனடியாக பீட்டா அமைப்பைத் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுதொடர்பாக கடிதமும் எழுதி விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கக் கோரினார். இதையடுத்து மால்டி நகர போலீஸார் உதவியுடன் அந்த யானை மீட்கப்பட்டது. விலங்குகள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் தவறு செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெங்களூருவில் ஏராளமான நாய்கள் உரிமையாளர்களால் கைவிடப்பட்டும், சாலையில் அனாதையாகக் காயத்துடன் இருக்கும். நாய்களுக்கு வசிப்பிடம் அமைக்கக் கோலி உதவினார். மேலும், தனது ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து, நாய்களைத் தத்தெடுத்து வளர்க்கவும் அறிவுறுத்தினார்.
கோலியின் அறிவுரையை ஏற்று அவரின் ரசிகர்கள் அனாதையான நாய்களுக்கு வசிப்பிடத்தையும், சிலர் தத்தெடுத்தும் வளர்க்கத் தொடங்கினார்கள். விலங்குகள் நலனின் மீது ஆர்வமாக இருக்கும் விராட் கோலிக்கு 2019-ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது பீட்டா சார்பில் வழங்கப்பட உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட்டா இந்தியா இயக்குநரும், மக்கள் தொடர்பு அதிகாரியுமான சச்சின் பங்கேரா கூறுகையில், "விலங்குகள் மீது தீவிரமான காதலும், அன்பும் வைத்துள்ள விராட் கோலி, விலங்குகள் மீதான கொடுமைகளை எந்த சூழலிலும் தட்டிக் கேட்கக்கூடியவர், போராடக் கூடியவர். விராட் கோலியின் செயலை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். விலங்குகள் நலனில் அக்கறை கொள்ள பீட்டா இந்தியா வலியுறுத்துகிறது" எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் பீட்டா இந்தியா சார்பில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.பனிக்கர் ராதாகிருஷ்ணன், நடிகர்கள் அனுஷ்கா சர்மா, சன்னி லியோன், சோனம் கபூர், கபில் சர்மா, ஹேமமாலினி, ஆர்.மாதவன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...