Published : 18 Aug 2015 04:08 PM
Last Updated : 18 Aug 2015 04:08 PM
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆட்ட பாணியில் எந்த வித மாற்றமும் இருக்காது என்று அணி இயக்குநர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.
இது குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:
மனநிலைகள் அதே போன்றுதான் இருக்கும். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே ஆக்ரோஷ, வெற்றி பெறும் மனநிலையுடன் 2-வது டெஸ்டிலும் ஆடப்போகிறோம். கடைசியில் ஒரு தவறு செய்தோம் அவ்வளவே. இன்னும் கொஞ்சம் தொலைவு நாம் கடக்க வேண்டும்.
மொயீன் அலிக்கு எதிராக மேலதிக ஆக்ரோஷத்தை காட்டினோம், இங்கு அதற்கு மாறாக தடுமாற்றத்துடன் ஆடினோம், பழைய முறை கிரிக்கெட்டை ஆடினோம், மிகவும் தற்காப்பு உத்தியைக் கடைபிடித்தோம்.
சமச்சீர் தன்மையை எட்ட, சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும், தன்னம்பிக்கையுடன் ஆடுவதே சிறந்த வழி. தடுத்தாடினால் எதிர்மறையாக ஆடுகிறோம் என்று அர்த்தமல்ல, தடுப்பு உத்தியும் கறாராக அமைந்தால் அதுவும் பாசிட்டிவ் ஆன அணுகுமுறையே.
தோல்விக்குப் பிறகு ஓய்வறையை விட்டு சில மணி நேரங்களுக்கு நாங்கள் வெளியே வரவில்லை. ஏனெனில் அனைவருமே மிகவும் வருந்திய நிலையில் இருந்தனர்.
தோல்வி ஒரு வலிதான், ஆனால் நாங்கள் நேர்மையாக விவாதித்தோம், பிரச்சினைகளுக்கு பின்னால் நாங்கள் ஒளிந்து கொள்ளவில்லை. சாக்குபோக்குகள் கிடையாது. மற்ற தோல்விகளை விட இது காயப்படுத்துகிறது ஏனெனில் டெஸ்ட் முழுதும் ஆதிக்கம் செலுத்திவிட்டு கடைசியில் தோல்வி என்பது காயம் ஏற்படுத்தக் கூடியதுதான். ஆனால் இத்தகைய தோல்விகளிலிருந்து வேகமாக பாடம் கற்றுக் கொள்ள முடியும். அடுத்த சில தினங்களில் மாற்றங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
வெற்றிக்கு நெருக்கமாக வந்திருக்கிறோம், ஒரு வெற்றி போதும், அதுவே பிற வெற்றிகளுக்கு தொடக்கமாக அமையும்.
சரியான அணிக்கலவை ஏற்பட சில காலங்கள் பிடிக்கும், ஆனால் அணிக்கு நிச்சயம் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் தேவை. ஸ்டூவர்ட் பின்னி அந்த இடத்துக்கு தகுதியானவர் என்றே நினைக்கிறேன்”
இவ்வாறு கூறினார் சாஸ்திரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT