Last Updated : 16 Nov, 2019 12:20 PM

 

Published : 16 Nov 2019 12:20 PM
Last Updated : 16 Nov 2019 12:20 PM

மிரட்டல் பந்துவீச்சு; திணறும் வங்கம்: இமாலய வெற்றியை நோக்கி இந்திய அணி

விக்கெட் வீழ்த்திய ஷமியை பாராட்டும் சக வீரர்கள் : படம் உதவி ட்விட்டர்

இந்தூர்

இந்தூரில் நடந்துவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

நண்பகல் உணவு இடைவேளை வரை வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 22 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைக் காட்டிலும் 283 ரன்கள் பின்தங்கியுள்ளது.

வங்கதேச வீரர்களை மனரீதியாக மிரட்டும் வகையில் அருகே நின்று எல்பிக்காக சத்தமிடும் பாணியை கோலி புதிதாக கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார். இன்று காலை நேரத்தில் மூன்று முறை எல்பிடபிள்யுக்காக ரிவியூ செய்து அதில் 2 ரிவியூவை கோலி வீணாக்கினார். களத்தில் முஷ்பிகுர் ரஹிம் 9 ரன்னிலும், மகமதுல்லா 6 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்தூரில் இந்தியா -வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் சேர்த்திருந்து. களத்தில் ஜடேஜா 60 ரன்களிலும், உமேஷ் 25 ரன்களிலும் இருந்தனர். இன்று காலை ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து, 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸை இன்று காலை தொடங்கியது.
அந்த அணியின் ஷாத்மான் இஸ்லாம், இம்ருல் கயஸ் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். காலை நேரப் பனியின் தாக்கத்தைப் பயன்படுத்திய இந்திய வீரர்கள் இசாந்த், உமேஷ் துல்லியமாகப் பந்து வீசினார்கள். இதனால் வங்கதேச பேட்ஸ்மேன்கள் பந்தை பேட்டில் வாங்கவே சிரமப்பட்டனர்.

உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா இருவரும் சில பந்துகளை அருமையான லைன் அன்ட் லென்த்தில் வீசி பேட்ஸ்மேன்களை திணறவிட்டார்கள். உமேஷ் யாதவ் வீசிய 6-வது ஓவரின் 2-வது பந்தில் இம்ருல் கைஸ் ஆப்-சைட் சென்ற பந்தை அடிக்க முற்பட்டபோது இன்சைட் எட்ஜ் எடுத்து போல்டாகினார். 6 ரன்னில் கையஸ் வெளியேறினார்

அடுத்து மோமினுள் ஹக் களமிறங்கினார். இசாந்த் சர்மா வீசிய 7-வது ஓவரில் அரவுண்ட் ஸ்டிக்கில் சென்ற பந்தை காலை முன்வைத்து தடுக்க முன்றார் ஷாத்மான். ஆனால், பேட்டுக்கும் காலுக்கும் இடையே அழகாகப் பந்து சென்று ஸ்டெம்ப்பைப் பதம் பார்த்தது. 6 ரன்னில் ஷாதப் ஆட்டமிழந்தார்

3-வது விக்கெட்டுக்கு மிதுன் களமிறங்கி, மோமினுள் ஹக்குடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அவ்வப்போது சில பவுண்டரிகளை அடித்தனர். இதற்கிடையே கேப்டன் கோலி இருமுறை எல்பிடபிள்யு ரிவீயு கேட்டு அது வீணாகியது. அதன்பின் 10 ஓவர்களுக்கு மேல் முகமது ஷமி அழைக்கப்பட்டார்.

அதற்கு ஏற்றார்போல் பலனும் கிடைத்தது. ஷமி வீசிய 13-வது ஓவரில் மோமினுள் ஹக் கால்காப்பில் வாங்கினார். ஆனால் இதற்கு நடுவர் அவுட் அளிக்கவில்லை என்பதால், கேப்டன் கோலி ரிவியூ செய்ததில் அது அவுட் என முடிவானது. மோமினுள் ஹக் 7 ரன்னில் ஷமி பந்தவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து முஷ்பிகுர் ரஹிம் களமிறங்கி மிதுன் இணைந்தார். ஷமி வீசிய 15-வது ஓவரில் மிதுனுக்கு ஒரு பவுன்ஸர் வீசினார். இதை தூக்கி அடிக்க மிதுன் முற்பட்டபோது, மிட் விக்கெட்டில் நின்றிருந்த அகர்வாலிடம் பந்து தஞ்சமடைந்தது. மிதுன் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினார்

முஷ்பிகுர் ரஹிம் 9 ரன்னிலும், மகமதுல்லா 6 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்னும் கைவசம் 6 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் 283 ரன்கள் பின்தங்கியுள்ளது வங்கதேச அணி. இன்னும் 283 ரன்களை அடித்து, அதன்பின் இந்திய அணியைவிட முன்னிலை பெறுவது என்பது சாத்தியமில்லாதது.

வங்கதேச அணியின் பேட்டிங் பரிதாபத்தைப் பார்க்கும்போது, இன்று மாலைக்குள் போட்டி முடிந்தாலும் வியப்பில்லை. நண்பகல் உணவு இடைவேளை வரை சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

உணவு இடைவேளைக்குப் பின் அஸ்வின், ஜடேஜா பந்துவீச வரும்போது, ஆட்டம் திசை மாறவும், விரைவான முடிவு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x