Published : 08 Aug 2015 08:58 PM
Last Updated : 08 Aug 2015 08:58 PM
ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்வதில் முக்கிய பங்கு வகித்த இங்கிலாந்து பேட்ஸ்மென் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தை கீழிறக்கி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.
ஸ்மித் 3-ம் இடத்துக்குச் செல்ல ஜோ ரூட் முதலிடம் பிடித்தார், ஏ.பி.டிவில்லியர்ஸ் 2-ம் இடத்தில் உள்ளார்.
டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து நிறுத்தி வைத்து வீழ்த்தினர், ஒரு பவுண்டரியை ஆஃப் திசையில் அடித்த பிறகு பீல்டர் ஒருவரை அதே திசையில் சுமார் 25-30 அடி வலப்புறமாக நகர்த்தியதைக் கவனியாமல் தேநீர் இடைவேளைக்கு 2 பந்துகளே இருக்கும் போது மீண்டும் அதே பந்துக்கு அதே ஷாட்டை ஆடி கேட்ச் கொடுத்து ஸ்மித் ஆட்டமிழந்தது ஷேன் வார்ன், மற்றும் ரிக்கி பாண்டிங்கின் கடுமையான விமர்சனத்தை ஈர்த்துள்ளன.
அதே போல் பந்துவீச்சு தரவரிசையில் ஸ்டூவர்ட் பிராட் 5-ம் இடத்திலிருந்து 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஜோ ரூட் 4 டெஸ்ட் போட்டிகளில் 443 ரன்களை 73.83 என்ற சராசரியில் எடுத்து அசத்தி வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் மற்றும் அரைசதம், டிரெண்ட் பிரிட்ஜில் இந்தத் தொடரின் 2-வது சதத்தை எடுத்தார் ஜோ ரூட். அதுவும் பிராட் ஆஸ்திரேலியாவை 60 ரன்களுக்குச் சுருட்டி துவம்சம் செய்த பிறகு முக்கிய கட்டத்தில் இவரும் பேர்ஸ்டோவும் அருமையான பார்ட்னர்ஷிப்பில் இங்கிலாந்தை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர்.
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை:
ஜோ ரூட், ஏபி.டிவில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஹஷிம் ஆம்லா, குமார் சங்கக்காரா, அஞ்சேலோ மேத்யூஸ், யூனிஸ் கான், கேன் வில்லியம்சன், கிறிஸ் ராஜர்ஸ், விராட் கோலி.
ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசை:
டேல் ஸ்டெய்ன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், டிரெண்ட் போல்ட், யாசிர் ஷா, வெர்னன் பிலாண்டர், மிட்செல் ஜான்சன், ரங்கனா ஹெராத், டிம் சவுதீ, மோர்னி மோர்கெல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT