Published : 27 May 2014 06:06 PM
Last Updated : 27 May 2014 06:06 PM

ஐபிஎல் போட்டிகளில் பாக். வீரர்களை தவிர்த்து பயிற்சியாளர்களை சேர்ப்பது ஏன்?- அஜ்மல்

ஐபிஎல். கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளர்களாக பாகிஸ்தான் வீரர்கள் இருக்கும்போது ஏன் மற்ற பாக். வீரர்கள் விளையாட முடியவில்லை? என்று பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் கேள்வி எழுப்பியுள்ளார்.

"பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல். கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்க வேண்டும். முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியாளர்களாக இருக்கும்போது தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் வீரர்கள் ஏன் அதில் இடம்பெறவில்லை? ஐபிஎல் கிரிக்கெட் தன்னைத்தானே உலகின் சிறந்த இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் என்று வர்ணித்துக் கொண்டிருப்பது உண்மையெனில் எந்த நாட்டைச் சேர்ந்த சிறந்த வீரர்களும் அதில் விளையாடுவதுதானே முறை"

இவ்வாறு அவர் 'பாக்பாஷன்' என்ற இணையதளத்தில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "இருதரப்பினரும் இது குறித்து ஆலோசிக்க வேண்டும். எதிர்காலத்தில் நிலைப்பாடு மாறும் என்று நம்புகிறேன். ஐபிஎல். கிரிக்கெட்டில் விளையாட நானும் ஆர்வமாகவே இருக்கிறேன்" என்றார்.

இதற்கு முன்பாக ஷாகித் அஃப்ரீடியும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காதது கிரிக்கெட் உலகில் இந்தியாவின் பெருமையை சீர்குலைப்பதாக உள்ளது என்று கூறியிருந்தார்.

சயீத் அஜ்மல் இப்போது இவ்வாறு கூறியுள்ளார். அவரிடம் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை பாகிஸ்தானால் வீழ்த்த முடியாமல் போவது ஏன் என்று கேட்டதற்கு, "இதற்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தை நான் கூற விரும்பவில்லை. நாங்கள் கூடுதல் நெருக்கடியில் இருக்கிறோம் என்பதும் உண்மையல்ல, மேலும் மிகப்பெரிய தொடரான உலகக் கோப்பையில் இந்தியாவை எதிர்கொள்ளும்போது அந்த அணி பற்றி நாங்கள் பெரிதாகவும் எண்ணிக்கொள்வதில்லை.

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது இந்தியாவைச் சந்திக்க ஆவலாக இருக்கிறோம். அடிலெய்டில் இரு அணிகளும் விளையாடும்போது இந்தியாவை வீழ்த்துவோம் என்று எதிர்பார்க்கலாம்" என்றார் அஜ்மல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x