Published : 14 Nov 2019 10:32 AM
Last Updated : 14 Nov 2019 10:32 AM

வெளியேறுகிறார் ரஹானே; 9 ஆண்டுகால ராஜஸ்தான் ராயல்ஸ் பயணம் முடிவுக்கு வருகிறது: போல்ட், ராஜ்பூத் அணி மாறுகிறார்கள்

ரஹானே : கோப்புப்படம்

மும்பை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 9 சீசன்களாக இடம் பெற்று விளையாடி வந்த அஜின்கயே ரஹானே அணியில் இருந்து வெளியேறுகிறார்.

அவரை டெல்லி கேபிடல்ஸ் அணி விலைக்கு வாங்குவதால், 2020-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரஹானே விளையாட உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் இன்று முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் ரஹானே எடுக்கப்பட்டார். பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ரஹானே, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் வெளியேறிய பின் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

ஆனால், கடந்த ஆண்டு ஸ்மித் மீண்டும் அணிக்குத் திரும்பிய பின் ரஹானேவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஸ்மித்திடம் அளிக்கப்பட்டது. இதனால், கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் ரஹானே சிறிது அதிருப்தியுடன் காணப்பட்டார்.

இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தலைமையிலும், ஆலோசகர் சவுரவ் கங்குலி தலைமையிலும் மெருகேறி வருகிறது. கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி அணி அனைத்து வகையிலும் சிறப்பாகச் செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது.

ஏற்கெனவே ஷிகர் தவண், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமார விஹாரி, ரிஷப் பந்த் போன்ற பேட்ஸ்மேன்கள் இருக்கும் நடுவரிசையை பலப்படுத்த ரஹானே இருந்தால் சிறப்பாக இருக்கும் என கங்குலி அளித்த ஆலோசனையை ஏற்று ரஹானே டெல்லி அணிக்கு வருகிறார்.

இதுவரை 140 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 3,820 ரன்களைச் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 121 ஆகவும் சராசரியாக 32 ரன்களும் வைத்துள்ளார்

முன்னதாக, அங்கித் ராஜ்புத், நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் ஆகியோரும் தங்கள் அணியில் இருந்து கழற்றிவிடுவது உறுதியாகியுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் ராஜ்பூத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்படுகிறார்.

அதேபோல டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கும் டிரன்ட் போல்ட், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்படுகிறார். அதேபோல, கிங்ஸ் லெவன் அணி அஸ்வினை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றிவிட்டுள்ளது. ரூதர்போர்ட் மும்பை அணிக்குச் செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x