Published : 13 Nov 2019 08:49 PM
Last Updated : 13 Nov 2019 08:49 PM
உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே குறுகிய காலத்தில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ல பாகிஸ்தானின் 16 வயது வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, தன் தாய் இறந்த துக்கத்தை அனுஷ்டித்தப் போதிலும் பெர்த்திற்குத் திரும்பி பயிற்சி ஆட்டத்தின் கடைசி நாளில் ஆஸ்திரேலிய வீரர்களை ஒரு அருமையான ஸ்பெல்லில் படுத்தி எடுத்தார்.
அவரது வேகத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் பவுன்சரில் ஆட்டமிழந்தார், மேலும் அவரது பந்துகளை எதிர்கொள்வதில் மார்கஸ் ஹாரிஸ் கடும் சிரமத்துக்குள்ளானதும் பட்டவர்த்தனம்.
பெர்த் மைதானத்தில் பாகிஸ்தானியர்களுக்கும் ஆஸ்திரேலியா ஏ அணிகும் இடைஏ 3 நாள் பயிற்சி ஆட்டம் ட்ராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி பாபர் ஆஸமின் அதிரடி 157, மற்றும் ஆசாத் ஷபீக்கின் 119 ரன்கள் மூலம் 428 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் கானின் 5 விக்கெட்டுகளினால் 122 ரன்களுக்குச் சுருண்டது. பாகிஸ்தான் 2 வது இன்னிங்சில் 152/3 என்று டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 91/2 என்று எடுக்க ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்த இரண்டாவது இன்னிங்சில்தான் 16 வயது இளம் புயல் நசீம் ஷா 8 அபார, அதிவேக பவுன்சர்கள் நிரம்பிய ஓவர்களை வீசி மார்கஸ் ஹாரிஸை பவுன்சரிலேயே வீழ்த்தினார். 21 ரன்களுக்கு அவர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
மேலும் கவாஜாவுக்கும் பவுன்சர்களை வீசி அவரை கடும் சிரமங்களுக்கு உள்ளாக்கினார் நசீம் ஷா. கல்லி கிரிக்கெட்டில் ஆடிய நசீம் ஷா பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியது உள்நாட்டு சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் மிஸ்பா உல் ஹக் இவரைப் பற்றி பேசியதும் இவர் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் தாயின் மரண துக்கத்திலும் இன்று அவர் கடமைக்குத் திரும்பி ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் பேட்ஸ்மென்களான மார்கஸ் ஹாரிஸ், கவாஜாவை ஆட்டிப்படைத்தது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT