Published : 13 Nov 2019 03:01 PM
Last Updated : 13 Nov 2019 03:01 PM
தன் வாழ்நாளில் தனக்கு மிகவும் கடினமாக இருந்த 2 பவுலர்கள் ஹர்பஜன் மற்றும் முரளிதரன் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதோடு 2001-ம் ஆண்டு அந்தப் புகழ்பெற்ற இந்திய தொடரின் முதல் போட்டியை வென்ற போது ஆஸ்திரேலிய அணி எந்த மாதிரியான ‘ஈகோ’வில் இருந்தது என்பது பற்றி மனம் திறந்துள்ளார்.
ஆஸ்திரேலிய இணையதளமான கிரிக்கெட். காம்.ஏயுவில் 30 நிமிடம் நடைபெற்ற ‘அன்பிளேயபிள்’ என்ற நிகழ்ச்சியில் ஆடம் கில்கிறிஸ்ட் பேசும் போது 2001- தொடருக்காக இந்தியா வந்திருந்த போது ஸ்டீவ் வாஹ் தலைமையில் மும்பையில் 16வது டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக வென்றது பற்றியும், பிறகு நடந்தது பற்றியும் பகிர்ந்துள்ளார்.
“மும்பை டெஸ்ட் போட்டியில் நாங்கள் 99 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தோம். நான் இறங்கினேன், 80 பந்துகளில் சதமடித்தேன். 3 நாட்களில் இந்தியாவை வீழ்த்தினோம். அப்போது நான் நினைத்தேன், ‘30 ஆண்டுகளாக இவர்கள் என்னதான் இங்கு வந்து செய்து கொண்டிருந்தார்கள்? இத்தனை எளிதாக இருக்கிறதே’ என்று. நான் எத்தனை பெரிய தவறு செய்து விட்டேன், என் சிந்தனை எவ்வளவு பெரிய தவறு என்பது அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் தெரிந்தது. கொல்கத்தாவிலேயே நாங்கள் எதார்த்தத்திற்கு திருப்பப் பட்டோம்” என்றார்.
அதாவது மும்பையில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு சாதனை 17 தொடர் வெற்றி இலக்குடன் இறங்கிய ஸ்டீவ் வாஹ் படை இந்திய அணிக்கு பாலோ ஆன் அளித்தது, ஆனால் விவிஎஸ் லஷ்மணின் சப்லைம் இன்னிங்ஸ் மற்றும் திராவிடின் அபார உறுதுணை சதம் ஆகியவற்றினால் பாலோ ஆனிலிருந்து இந்திய அணி ஒரு அபார வெற்றி பெற்றது, லஷ்மண் 281, திராவிட் 180, என்பதோடு ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். சென்னையிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்று இந்தியா கைப்பற்றியது கங்குலி தலைமை மைல்கல்லாகும்.
அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த பிறகான மனநிலை குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது, “அந்தத் தொடர் முடிந்தவுடன் கடினமான சூழ்நிலையிலிருந்து வெளியே வர அட்டாக் அட்டாக் அட்டாக் என்ற தாரகமந்திரத்திலிருந்து வெளியே வருவது என்று முடிவெடுத்தோம். ஹர்பஜன் சிங் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், என் கிரிக்கெட் வாழ்நாள் முழுதுமே ஹர்பஜன் ஒருவிதத்தில் எனக்கு வைரியாகவே இருந்திருக்கிறார். இவரையும் முரளிதரனையும் ஆடுவது எனக்கு எப்போதுமே கடினமாகவே இருந்தது.
2001 தொடர் முடிந்த பிறகே எப்போதும் தாக்குதல் ஆட்டம் கைகொடுக்காது என்ற முடிவுக்கு வந்தோம். எங்கள் ஈகோவை அடக்கி ஒடுக்கி தடுப்பு உத்தியோடு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்பது எங்கள் அனைவரின் கூட்டு மனநிலையாகவே இருந்தது.
பவுலர்களும் இந்தியா வந்தால் புதிய பந்தில் ஒரேயொரு ஸ்லிப், டீப் மிட்விக்கெட் பவுண்டரி வைத்துப் பவுலிங் செய்யும் சமரசத்துக்கு வந்தனர்” என்றார் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT