Published : 22 Aug 2015 06:57 PM
Last Updated : 22 Aug 2015 06:57 PM
கொழும்புவில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் ராகுல் விக்கெட்டை இழந்து 70 ரன்கள் எடுத்துள்ளது.
கே.எல்.ராகுல் 2 ரன்களில் தம்மிக பிரசாத்தின் முதல் ஓவரிலேயே இன்ஸ்விங்கர் ஒன்றுக்கு முன்னங்காலை நன்றாகக் குறுக்கே போடாமல் அரைகுறையாக முன்னங்கலை கொண்டு வந்தார், பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. முதல் இன்னிங்ஸ் சதம் எடுத்தவரிடமிருந்து இத்தகைய தளர்வான தடுப்பாட்ட உத்தியை இலங்கை பவுலர் பிரசாத்தே எதிர்பார்க்கவில்லை, ஒரு விதத்தில் விக்கெட்டை ராகுல் தானம் செய்தார் என்றே கூற வேண்டும்.
அதன் பிறகு சுமார் 29 ஓவர்களை முரளி விஜய்யும், ரஹானேயும் உறுதியுடன் தடுத்து ஆடினர். பதட்டத்துடன் ஆடவில்லை, நல்ல தன்னம்பிக்கையுடனேயே ஹெராத், கவுஷால் ஆகியோரை நெருக்கமான களவியூகத்திலும் தடுத்தாடினர்.
முரளி விஜய் 39 ரன்களுடனும், அஜிங்கிய ரஹானே 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் சேர்ந்தே மொத்தம் 3 பவுண்டரிகளையே இந்த இன்னிங்ஸில் அடித்துள்ளனர், அதுவும் கடைசி 80 பந்துகளில் பவுண்டரியே வரவில்லை. அவ்வளவு உன்னிப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.
முன்னதாக இலங்கை அணி 306 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தேநீர் இடைவேளையின் போது 298/7 என்று இருந்த இலங்கை, வந்தவுடன் 22 ரன்களில் இருந்த ஜெஹன் முபாரக் விக்கெட்டை மிஸ்ராவின் அருமையான லெக் ஸ்பின் பந்துக்கு இழந்தது. அவர் பவுல்டு ஆனார்.
பந்து காற்றில் கூக்ளி போல் லேசாகத் திரும்பியது இதனையடுத்து முபாரக் ஆஃப் ஸ்டம்பை கவர் செய்யும் உத்தியைக் கடைபிடித்தார். அதாவது பந்து கூக்ளியாகவே மட்டையை கடந்து செல்லும் என்று நினைத்தார், ஆனால் லெக் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆகி லெக்ஸ்பின் ஆனது, தடுப்பு மட்டையைக் கடந்து கில்லியைத் தட்டியது, மிகவும் அருமையான பந்து, ஷேன் வார்ன் போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அடிக்கடி வீசும் ஒரு பந்தாகும் இது.
ஹெராத்துக்கு ஒரு முறை பிளம்ப் எல்.பி. கொடுக்கப்படாமல் கடைசியில் அஸ்வின் பந்தை ஸ்வீப் ஆடமுயன்று 1 ரன்னில் எல்.பி.ஆகி வெளியேறினார். தாரிந்து கவுஷால், மிஸ்ரா பந்தில் சஹாவிடம் ஸ்டம்ப்டு ஆனார். இலங்கை 306 ஆல் அவுட். 241/3 என்ற நிலையிலிருந்து அடுத்த 65 ரன்களுக்கு இந்தியா 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது. கட்டுக்கோப்பான, பொறுமையான பந்து வீச்சுக்கு கிடைத்த வெற்றியாகும் இது. களவியூகமும் பவுண்டரிகள் அடிக்க முடியாதவாறு அபாரமாக அமைந்தது.
மிஸ்ரா அதிகபட்சமாக 21 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களுடன் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் இசாந்த் சர்மா மதியம் வீசிய அருமையான பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற பின்னி, யாதவ் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்தப் பிட்சில் பந்துகள் அவ்வப்போது திரும்பினாலும் பேட்டிங்கும் செய்ய வாய்ப்புள்ளதாகவே அமைந்துள்ளது, எனவே இந்திய அணி 300 ரன்களுக்கும் மேல் முன்னிலையைக் கொண்டு சென்றால் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment