Published : 14 Aug 2015 10:19 AM
Last Updated : 14 Aug 2015 10:19 AM
மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் (ரோஜர் கோப்பை) டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதேநேரத்தில் மற்றொரு முன்னணி வீரரான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆன்டி முர்ரே 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் டாமி ராபர்ட்டோவை தோற்கடித்தார். இந்த ஆட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு அடுத்த நாளில் நடந்தது. முர்ரே தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லக்ஸம்பர்க்கின் ஜில்ஸ் முல்லரை சந்திக்கவுள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை எதிர்த்து விளையாடிய பிரெஞ்சு ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா 6-7 (8), 6-4, 4-0 என்ற நிலையில் இருந்தபோது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் கிர்ஜியோஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 7-6 (4), 6-3 என்ற நேர் செட்களில் உக்ரைனின் செர்ஜி ஸ்டக்கோவ்ஸ்கியை தோற்கடித்தார். நடால் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்யாவின் மிக்கேல் யூஸ்னியை சந்திக்கிறார். யூஸ்னி தனது 2-வது சுற்றில் பிரான்ஸின் ஜில்ஸ் சைமனை வீழ்த்தினார். மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் போட்டியில் 2013-ல் சாம்பியன் பட்டம் வென்ற நடால், அதன்பிறகு இப்போதுதான் கனடாவில் விளையாடுகிறார். இங்கு 52 போட்டிகளில் விளையாடியுள்ள நடாலுக்கு இது 40-வது வெற்றியாகும்.
வெற்றி குறித்துப் பேசிய நடால், “இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. நான் விளையாடியவிதம் மனநிறைவு அளிக்கிறது. எனது உடல்நிலை நன்றாக இருப்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதுபோன்றதொரு பயிற்சி இப்போது எனக்கு தேவை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்” என்றார்.
போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் கெய் நிஷிகோரி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பாப்லோ அன்டுஜாரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி னார்.
பெர்டிச் அதிர்ச்சி தோல்வி
சர்வதேச தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் டொனால்டு யங் 7-6 (5), 6-3 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த 35-ம் நிலை வீரரான ஜேக் சாக் ஸ்பிரேங் 5-7, 7-6 (5), 7-5 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் இருந்த பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தினார்.
மகளிர் பிரிவு
ரோஜர் கோப்பை போட்டியின் மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச்சையும், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில உள்ள செர்பியாவின் அனா இவானோவிச் 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் பெலாரஸின் ஓல்காவையும் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT