Last Updated : 08 Aug, 2015 07:40 PM

 

Published : 08 Aug 2015 07:40 PM
Last Updated : 08 Aug 2015 07:40 PM

திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு முரளி விஜய்யை உதாரணம் காட்டும் கவாஸ்கர்

இங்கிலாந்து பிட்ச்களில் ஸ்விங் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியுள்ளது பற்றி சுனில் கவாஸ்கர் கூறும் போது முரளி விஜய்யின் உத்தியை ஆஸ்திரேலிய வீரர்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

உலகின் அச்சமூட்டும் வேகப்பந்து வீச்சாளர்களான வெஸ்லி ஹால் தொடங்கி கிரிபித், ராபர்ட்ஸ், கார்னர், கிராப்ட், ஹோல்டிங் மார்ஷல், இங்கிலாந்தின் ஜான் ஸ்னோ, பாப் விலிஸ், கிறிஸ் ஓல்ட், போத்தம், நியூஸிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லி, ஆஸ்திரேலியாவில் தாம்சன். லில்லி, லென் பாஸ்கோ, பாகிஸ்தானின் இம்ரான், அசீப் மசூத், சர்பராஸ் அகமட், வாசிம் அக்ரம் என்று பலரையும் சந்தித்து சதங்களை அடித்துள்ள சுனில் கவாஸ்கர் உண்மையில் ஸ்விங் பவுலிங்கை கணிப்பதில் மாஸ்டர் என்று பலராலும் புகழப்பட்டவர்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், பேட்ஸ்மென்கள் நிற்கும் விதம் குறித்து தொடங்கி உத்திகளை விவரித்தார்:

"பேட்ஸ்மென்களுக்கு முதலில் தங்கள் ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்பது நன்கு தெரிவது அவசியம். கார்டு எடுக்கும் போது ஒருவரது உயரத்தை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும், வலது கை பேட்ஸ்மெனாக வலது கண்ணும், இடது கை பேட்ஸ்மெனாக இருந்தால் இடது கண்ணும் கார்டு எடுக்கும் போது முக்கியமானதாகும். பேட்டிங் சாதக பிட்ச்களில் ஸ்விங் இருக்காது அதனால் ஸ்டான்ஸ் தவறானாலும் பிழைத்து விடலாம்.

ஆனால், ஸ்விங் ஆகும் போது அப்படியல்ல. ஒவ்வொரு பேட்ஸ்மெனும் ஒவ்வொரு விதமாக கார்டு எடுக்கலாம். ஆனால் வலது கை பேட்ஸ்மென்களின் வலது கண் ஆஃப் ஸ்டம்ப் லைனில் இருப்பது மிக மிக முக்கியம், மட்டை தரையில் பட குனிந்து நிற்பது ஸ்விங் ஆட்டக்களங்களில் முக்கியம். இடது கண் பந்தின் அளவு மற்றும் திசையை கவனிக்கும், ஆனால் வலது கண்தான் நமக்கு வழிகாட்டி. இந்த இரண்டும் சேர்ந்த் ஒத்துழைத்தால் எந்த பந்தை ஆடுவது, எந்தப் பந்தை விடுவது என்பது நமக்கு தானாக தெரியவரும்.

ஆனால் இன்றைய பேட்ஸ்மென்கள் கிரீஸில் நிமிர்ந்து நேர்பட நிற்கின்றனர். குனிந்து மட்டையை ஒரு முறை கிரீஸில் தட்டிவிட்டு, பிறகு பவுலர் ஓடிவரத் தொடங்கியவுடன் நிமிர்ந்து நிற்கின்றனர், இதனால் ஆஃப் ஸ்டம்ப் லைனிலிருந்து வலது கண் விடுபடுகிறது, எனவே அனைத்து குழப்பங்களும் ஏற்படுகிறது.

முரளி விஜய் கடந்த இங்கிலாந்து தொடரில் மிகச்சிறப்பாக உத்தியைக் கையாண்டார். ஆஃப் ஸ்டம்ப் பந்துகளுக்கு விஜய்யின் கணிப்பு முற்றிலும் தவறில்லாததாக அமைந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே விழும் பந்துகளை அவர் ஆடாமல் விட்டுவிட்டார். இங்குதான் நிறைய பேட்ஸ்மென்கள் ஆடச் சென்று பிரச்சினையில் சிக்குகின்றனர்.

மாறாக உத்தி ரீதியாக சரியாக இருக்கும் புஜாரா போன்றவர்கள் ஆஃப் ஸ்டம்ப் லைனை கணிப்பதில் தவறிழைப்பதால் சோபிக்க முடியவில்லை. இதனால் விராட் கோலியும் இங்கிலாந்தில் திணறியதைப் பார்த்தோம். காரணம் இவரும் நிமிர்ந்து நிற்பவர். நிமிர்ந்து நிற்கலாம், ஆனால் அது ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க பிட்ச்களில் கைகொடுக்கும். ஏனெனில் அங்கு கூடுதல் பவுன்ஸ் இருக்கும். ஆனால் ஸ்விங் பிட்ச்களில் நிமிர்ந்து நிற்பது பிரச்சினைகளையே கொடுக்கும்.

எனக்கு கவனம் என்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று, இன்றும் கூட ஒரு அறையில் அதிக நெரிசலில் நான் புத்தகம் படிக்கிறேன் என்றால் கூட அந்த சப்தம் என் காதுகளில் விழாது. இங்கிலாந்தில் ஆடும்போது பொறுமையும் நிதானமும் இருந்தால் உத்தியும் கைகொடுக்கும். உயர்மட்ட கிரிக்கெட்டில் நிதானமும், பொறுமையுமே வீரர்களை தரம் பிரிக்கிறது” என்றார் கவாஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x