Published : 05 Nov 2019 03:40 PM
Last Updated : 05 Nov 2019 03:40 PM

வெற்றி பெறும் நிலையில் விரட்டலைத் தூக்கி எறிந்த இங்கிலாந்து: நியூஸிலாந்து அபார வெற்றி

நியூஸிலாந்து கொண்டாட்டம். | கெட்டி இமேஜஸ்.

நெல்சனில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூஸிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி கொலின் டி கிராண்ட் ஹோம் (55) அதிரடீல் 180/7 என்று முடிந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 139/2 என்று 15வது ஒவரில் இருந்த நிலையிலிருந்து 18 பந்துகளில் 10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விரட்டலைத் தூக்கி எறிந்து தோல்வி கண்டு 166/7 என்று முடிந்தது.

5.2 ஓவர்களில் 42 ரன்கள் தேவை என்ற நிலையில் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்திருக்கிறது என்றால் அந்த அலட்சியத்தை என்ன சொல்வது?

டிம் சவுதி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது மார்டின் கப்திலின் அதிரடி தொடக்கத்தின் மூலம் பயனளித்தது. கப்தில் 17 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 33 ரன்களை விளாசினார், கரன் சகோதரர்களை 3 பவுண்டரிகளும் சாகிப் மஹ்மூதின் ஓவரில் 3 பவுண்டரிகளையும் அடித்து நொறுக்கினார். பாட் பிரவுன் பந்து வீச வந்த போது முதலில் பவுன்சர் வீச அது லெக் திசையில் கப்தில் மட்டையிலிருந்து பவுண்டரிக்கு பறந்தது, ஆனால் அடுத்த பந்து வேகமாக ஓடி வந்து விரலின் மூலமாக ஒரு பந்தை வீச கவரில் கொடியேற்றி வெளியேறினார்.

மன்ரோ 6 ரன்களில் டாம் கரனிடம் சொதப்பி வெளியேறினார். செய்ஃபர்ட் 7 ரன்களில் ரிவர்ஸ் ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று பார்கின்சனிடம் பவுல்டு ஆனார். 8 ஓவர்களில் 69/3 என்று ஆனது நியூஸிலாந்து, அதன் பிறகு கொலின் டி கிராண்ட்ஹோம், ராஸ் டெய்லர் (27) இணைந்து 7 ஓவர்களில் 66 ரன்கள் கூட்டணி அமைத்து அணியை மீட்டனர்.

கொலின் டி கிராண்ட் ஹோம், மஹ்மூதின் 2வது ஓவரில் 15 ரன்கள் விளாசினார், நடு ஓவர்களில் இவரது ஆட்டம் நியூஸிலாந்து அணிக்கு சமீப காலங்களில் பெரிய அளவில் கைகொடுக்கிறது. 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்த கொலின் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். ராஸ் டெய்லர், ஜிம்மி நீஷம், சாண்ட்னர் ஆகியோர் பங்களிப்பு செய்தாலும் 200 போயிருக்க வேண்டிய ஸ்கோர் இங்கிலாந்தின் டாம் கரன், சாம் கரன் ஆகியோரால் கட்டுப்படுத்தப்பட்டு 180 ரன்களுக்கு 7 விக்கெட் என்று முடிந்தது.

இங்கிலாந்து அதிரடி தொடக்கம், பிறகு எதிர்பாரா சரிவு:

181 ரன்களை விரட்டிய இங்கிலாந்து பேண்ட்டனின் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் மூலம் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க, 2.5 ஓவர்களில் 27 என்று தொடக்கம் கண்டது. ஆனாஅல் 18 ரன்களில் இவர் டிக்னரின் கட்டருக்கு பவுல்டு ஆனார்.

டேவிட் மலான், வின்ஸ் ஆகியோர் அதன் பிறகு நியூஸிலாந்தின் மிடில் ஓவர்களில் வெளுத்துக் கட்டினர். மலானுக்கு 15 ரன்களில் சவுதி கடினமான கேட்சை விட்டார். இதனையடுத்து இஷ் சோதி, நீஷம் ஆகியோரை பவுண்டரிகள் விளாசிய மலான் 34 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 55 ரன்களில் இஷ் சோதியிடமே வெளியேறினார், ஆனால் இங்கிலாந்து 10.2 ஓவர்களில் 90 ரன்கள் என்று வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

வின்ஸ் (49), மோர்கன் இணைந்து ஸ்கோரை 139 ரன்களுக்கு உயர்த்திய போது இங்கிலாந்து வெற்றி ஏறக்குறைய உறுதியானது, ஆனால் அப்போதுதான் திருப்பு முனை ஏற்பட்டது. 2 சிக்சர்களுடன் 18 ரன்கள் எடுத்திருந்த மோர்கன், சாண்ட்னர் பந்தை லெக் திசையில் டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சாம் பில்லிங்ஸ் அடுத்தபடியாக ஒரு ரன்னில் மன்ரோவின் அபார நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். 49 ரன்களுக்கு அருமையாக ஆடிய ஜேம்ஸ் வின்ஸ் அடுத்ததாக வெளியேறினார். சாம் கரண், லூயிஸ் கிரிகரி ஆகியோரை அதிவேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் வெளியேற்ற 18வது ஓவர் முடிவில் 149/7 என்று ஆனது இங்கிலாந்து. 139/2 என்பதிலிருந்து 10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை தூக்கி எறிந்து விரட்டலையும் விட்டெறிந்தது. டாம்கரன் 14 ரன்கள் எடுத்தாலும் போதவில்லை 166/7 என்று முடிந்தது இங்கிலாந்து.

ஆட்டநாயகனாக கொலின் டி கிராண்ட்ஹோம் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x