Published : 04 Nov 2019 06:06 PM
Last Updated : 04 Nov 2019 06:06 PM

2020 ஐபிஎல் போட்டியை விறுவிறுப்பாக்கும் அதிரடி மாற்றம்: அறிமுகமாகிறது பவர் ப்ளேயர்

புதுடெல்லி,

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியை விறுவிறுப்பாக்கும் வகையில் புதிய மாற்றத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) கொண்டு வர உள்ளது.

இதுவரை இல்லாத வகையில் பவர் ப்ளேயர் எனும் புதிய முறையை கொண்டுவர உள்ளது. இந்த முறை கொண்டுவரப்பட்டால், ஆட்டத்தில் பன்மடங்கு விறுவிறுப்பை அதிகப்படுத்திவிடும்.

இந்த பவர்ப்ளேயர் முறையில் எந்த அணியும் தங்களுக்குத் தகுதியான ஒரு மாற்று வீரரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வெளியிலிருந்து கொண்டுவர முடியும்.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், " பவர் ப்ளேயர் திட்டம் ஏற்கனவே பிசிசிஐ கூட்டத்திலும், ஐபிஎல் கூட்டத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஐபிஎல் கவுன்சிலில் இன்னும் ஆலோசிக்கப்பட வேண்டியது இருக்கிறது. நாளை மும்பையில் நடக்கும் பிசிசிஐ கூட்டத்தில் இது ஆலோசிக்கப்பட்டு இறுதிமுடிவு எடுக்கப்படும்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒரு அணி 11 வீரர்களை அறிவிக்கத் தேவையில்லை அதற்குப் பதிலாக 15 வீரர்களை அறிவிக்க வேண்டும். போட்டியின் எந்த இடத்திலும், விக்கெட் வீழ்ந்தாலும், முக்கியமான ரன் அடிக்க வேண்டிய இடத்திலும் விளையாடும் 11 வீரர்கள் தவிர மீதமுள்ள 4 வீரர்களில் தேர்வு செய்து களமிறக்க முடியும். அதாவது மாற்று வீரராக ஒரு வீரர் இருப்பதற்குப் பதிலாக 4 வீரர்கள் இருப்பார்கள்.


இந்ததிட்டம் முதலில் விரைவில் வர இருக்கும் முஷ்டாக் அலி போட்டியில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தப்பட்டு அதன்பின் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகும்" எனத் தெரிவித்தார்

இந்த பவர்ப்ளேயர் திட்டப்படி ஒரு அணி வழக்கமாக 11 வீரர்களுக்குப் பதிலாக 15 வீரர்களை ஒவ்வொரு போட்டிக்கும் அறிமுகம் செய்ய வேண்டும். இதில் விளையாடும் 11 வீரர்கள் தவிர மீதமுள்ள 4 பேர் களத்துக்கு வெளியே இருப்பார்கள்.

இப்போது ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் கடைசி ஓவரில் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் கையில் கடைசி விக்கெட் மட்டும்தான் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். வெளியே விளையாடாத 4 வீரர்களில் ஆன்ட்ரூ ரஸல் இருக்கிறார் என்றால், அவரை கடைசி ஓவருக்கு பயன்படுத்திக்கொண்டு ஆட்டத்தை வெற்றி பெற வைக்கலாம்.

அதேபோல கடைசி ஓவரில் 6 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்ற நிலையில் மாற்றுப் பந்துவீச்சாளராக பும்ரா வெளியில் இருந்தால் அவரை வரவழைத்து பந்துவீசச் செய்ய முடியும். இந்த கடைசி ஓவரில் மாற்றப்பட்டு களமிறக்கப்படும் பவர்ப்ளேயர் ஆட்டத்தின் திருப்புமுனை வீரராக இருப்பார். இதுதான் பவர்ப்ளேயர் திட்டமாகும்.

இந்த திட்டம் 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள்இருப்பதாகக் கூறப்படுகிறது

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x