Published : 04 Nov 2019 02:58 PM
Last Updated : 04 Nov 2019 02:58 PM
டெல்லியில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோற்றது. வங்கதேசம் இந்தியாவுக்கு எதிராக முதல் டி20-யை வென்று சாதனை படைத்தது.
இந்திய அணியை விடவும் அனுபவக் குறைவாக இருந்தாலும் மைதானச் சூழ்நிலைகளை சரியாகப் பயன்படுத்தியக் கேப்டன் வங்கதேசத்தின் மஹமுதுல்லா என்றால் மிகையாகாது. ரோஹித் சர்மா பேட்டிங்கிலும் சொதப்பி கேப்டன்சியிலும் சொதப்பியதைக் காண முடிந்தது.
டெல்லியில் காற்று மாசு அபாயக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் உண்மையில் பிசிசிஐ அங்கு போட்டியை நடத்தியிருக்கக் கூடாது, வீரர்கள் நுரையீரலுக்கு பிசிசிஐ பாதுகாப்பு அளிக்க முடியுமா? 2 வீரர்கள் வாந்தி எடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைதான நச்சுக்காற்று, மட்டரகமான பிட்ச், அனுபவமற்ற வீரர்கள் என்று அனைத்து எதிர்க்கூறுகளையும் திறம்படக் கையாண்டார் மஹமுதுல்லா, ரோஹித் தோல்வியடைந்தார்.
ரோஹித், இளம் ரிஷப் பந்த்தின் ரிவியூ கேட்கும் சந்தர்ப்பங்களை மறைமுகமாகச் சாடலாம், ஆனால் அதற்கும் முன்பாக ரோஹித் சர்மா தன்னை நோக்கி கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில் இதுவரை திருப்திகரமாக வீசியதாக சரித்திரமோ, பூகோளமோ இல்லாத கலீல் அகமெடை ஏன் கடைசி 6 ஓவர்கள் இருக்கும் போது 3 ஓவர்களை ஏன் கொடுத்தோம் என்ற கேள்வியே அது. இதில் ஒரு ஓவரில் அவர் 18 ரன்களை வழங்கியது, அதுவும் இந்த ஆக மந்தமான பிட்சில் எப்படி என்பது கலீலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்க்கார் இயல்பாக, சரளமாக ஆடினார்கள் என்று கூற முடியாது. ஏனெனில் ஒருவிதமாக அரைகுறை குழிப்பிட்சில் பந்துகள் திரும்பின. சிலபல ஷாட்களை இருவரும் முயன்றாலும் மாட்டவில்லை, ஆனாலும் பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் எப்படிச் சென்றனர்? காரணம் ரோஹித் சர்மாவின் களவியூகம். இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க அவரிடம் போதிய உத்திகள் இல்லை என்பதையே காட்டியது, இருவரில் ஒருவர் அவுட் ஆனால் நெருக்கலாம் என்பதற்கு ரன்கள் போதாது 148 தான் அடித்திருக்கிறோம். எனவே விக்கெட் விக்கெட் என்றுதான் அவர் கேப்டன்சி இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் கேப்டன்சியில் அந்த நோக்கு இல்லை.
கலீல் அகமெடினால் வலது கை பேட்ஸ்மென்களுக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் வீசும் உடலின் குறுக்கே செல்லும் கோணத்திலான பந்துகளை வீசத் தெரியவில்லை, ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பேட்ஸ்மெனுக்குள் வீசினார், இவரது வேகத்துக்கு அத்தகைய பந்துகள் டெல்லியின் மட்டரகமான பிட்சில் கை கொடுக்கப் போவதில்லை. 10வது ஓவரில் சாஹல் 1 ரன்னையும் வாஷிங்டன் சுந்தர் 13ம் ஓவரில் 1 ரன்னையும் கொடுத்தனர்.
ஆனால் முஷ்பிக்குர் ஆட்டம் முடிந்தவுடன் கூறியது என்னவெனில், “களத்தில் நிற்கும் பேட்ஸ்மென்களுக்குத்தான் பிட்சைப் பற்றி தெரியும், இறங்குபவர்களுக்குத் தெரியாது, அல்லது உள்ளே அமர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது, அதனால்தான் நான் சவுமியா சர்க்காரிடம் கூறினேன், நம்மில் ஒருவர் 19வது ஓவர் வரை ஆடிவிட்டால் 25 ரன்கள் இருந்தாலும் விரட்டலாம் என்றேன். காரணம் வேகப்பந்து வீச்சுதான் வீசுவார்கள் என்றேன்” என்று மிகச்சரியாக ரோஹித் சர்மாவின் உத்தியை முன் கூட்டியே அறிந்து விட்டார் முஷ்பிகுர். இதனை ரோஹித் உடைக்கவில்லை.
6வது பவுலராக ஷிவம் துபேயை வைத்திருந்தும் அவர் 3 பந்துகளையே வீசினார். கலீல் அகமெட் ஒரு ஓவரைக் குறைத்து வீசி ஷிவம் துபே ஒரு ஓவரை வீசிப் பார்த்திருக்கலாம். பிட்ச் ஸ்பின் எடுக்கும் போது சாஹாலை முதலிலேயே முடித்து சவுமியா சர்க்காரையோ, முஷ்பிகுர் ரஹீமையோ வீழ்த்தப்பட்டிருந்தால் கலீல் அகமெட் ஓவரும் 18 ரன்களுக்குச் சென்றிருக்காது.
ஷிகர் தவணை முதலில் வெளியே அனுப்பிவிட்டு சஞ்சு சாம்சனை அணியில் தேர்வு செய்து தொடக்கத்தில் களமிறக்கிப் பார்க்கும் சோதனை முயற்சியை எடுக்க வேண்டும், கிரிக்கெட் ஆட்டம் டெஸ்ட், ஒருநாள் என்று இரண்டு வடிவங்களில் மட்டுமே இருந்த போது கூட கேப்டன்கள் நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டனர், அவர்களெல்லாம் கற்பனை வளம் கொண்ட கேப்டன்கள். ஆனால் முழுதும் பலவிஷயங்களையும் சோதித்துப் பார்த்து சமயோசிதமாக துருப்புச் சீட்டுகளை இறக்க வேண்டியிருக்கும் டி20 போட்டியை பாரம்பரிய அணுகுமுறையில் ஆடினால் என்ன நடக்குமோ அதுதான் இந்திய அணிக்கு நேற்று நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT