Published : 21 Oct 2019 03:12 PM
Last Updated : 21 Oct 2019 03:12 PM

ஷமி ஆக்ரோஷத்தில் 2-வது இன்னிங்சிலும் தெ.ஆ. மோசம்: உமேஷ் பந்தில் ஹெல்மெட்டில் வாங்கிய டீன் எல்கர் ரிட்டையர்டு

படம். | ஏ.எஃப்.பி.

ராஞ்சி

ராஞ்சியில் நடைபெறும் 3வது, இறுதி டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஒயிட்வாஷ் வெற்றியை நோக்கி இந்திய அணி முன்னேறிக் கொண்டிருக்கிறது. முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்குச் சுருண்டு பாலோ ஆன் ஆடிவரும் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்கள் என்று தேநீர் இடைவேளையின் போது தடுமாறி வருகிறது.

இன்றைய தினம் 12 விக்கெட்டுகல் சரிந்துள்ளன. வேகப்பந்து வீச்சாளர்களிடையே 7 விக்கெட்டுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. 4 விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் கைப்பற்றினர். ஒரேயொரு பேட்ஸ்மென் உமேஷ் யாதவ்வின் அபாரமான நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார், இது முதல் இன்னிங்சில்.

335 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாலோ ஆன் ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா அணி மொகமது ஷமி, உமேஷ் யாதவ்வின் ஆக்ரோஷத்துக்கு விடை கிடைக்காமல் தட்டுத் தடுமாறி வருகிறது. 26/4 என்ற நிலையில் டீன் எல்கர் 16 ரன்களுடனும் கிளாசன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

பாலோ ஆனைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக் (5) , உமேஷ் யாதவ் வீசிய அவரது முதல் ஓவரில் ஆஃப் அண்ட் மிடிலில் வேகமாக வந்த பந்தை தவறான லைனில் ஆடி ஸ்டம்பைக் கோட்டை விட்டார். ஆஃப் ஸ்டம்ப் நடந்து சென்று சில அடிகள் தள்ளி போய் விழுந்தது. என்ன நடந்தது என்று புரியாமல் அவர் வெளியேறினார். உண்மையில் அது நேர் பந்து, தவறான லைனில் ஆடி கோட்டை விட்டார் டி காக்.

2-வதாக, ஜுபைர் ஹம்சாவுக்கு மொகமது ஷமி மிக அருமையாக பந்தை உள்ளே கொண்டு வர பந்து பிட்ச் ஆகி சற்றே நேர் ஆனது. ஒரு வேகமான லெக் கட்டர் பந்து போன்ற அது ஹம்சாவின் மட்டையைக் கடந்து பவுல்டு ஆனது, ஒருவிதத்தில் விளையாட சாத்தியமில்லாத பந்து என்பார்களே அந்த வகையறாவைச் சேர்ந்தது இது. ஹம்சா டக் அவுட்.

அடுத்ததாக கேப்டன் டுபிளெசி, முகமது ஷமியின் பந்து ஒன்று தாழ்வாக ஷுட் ஆக கால்காப்பில் வாங்கி எல்,பி.ஆனார், ரிவியூவும் பலிக்கவில்லை, ஒரு விதத்தில் பரிதாபமான அவுட். இவர் 4 ரன்கள்.

அடுத்ததாக தெம்பா பவுமாவின் மோசமான தொடர் என்பதை அறிவிக்குமாறு ஷமி வீசிய பந்தை எட்ஜ் செய்து சஹாவின் கேட்சுக்கு டக் அவுட் ஆனார் 22/4 என்று ஆனது. கடைசியில் தேநீர் இடைவேளைக்கு முன்பாக டீன் எல்கர், உமேஷ் யாதவ் பந்து ஒன்று 145 கிமீ வேகத்தில் தலைக்கு எகிற பந்து வந்த வேகத்தில் அவர் கண்களை அகற்ற வலது புறம் காதுக்கு மேல் ஹெல்மெட்டைத் தாக்கியது, அவர் தற்போது ரிட்டையர்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முகமது ஷமி 6 ஓவர் 2 மெய்டன் 10 ரன்கள் 3 விக்கெட், உமேஷ் 1 விக்கெட். கிளாசன், லிண்டே இருவரும் தற்போது ஆடிவருகின்றனர், எல்கர் நிலை என்னவென்பது இனிமேல்தான் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x