Published : 10 Oct 2019 03:10 PM
Last Updated : 10 Oct 2019 03:10 PM

புனே டெஸ்ட்: பிரமாதமான சதத்துக்குப் பிறகு ஆட்டமிழந்தார் மயங்க் அகர்வால்..விராட் கோலிக்கு கேட்சை விட்டார் மஹராஜ்

புனே,

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வரும் இந்திய அணியின் முதல் இன்னிங்சில் மயங்க் அகர்வால் தொடர்ச்சியாக 2வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடிக்க இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது

மயங்க் அகர்வால் 16 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 195 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து சற்று முன் ரபாடா பந்து ஒன்று லெந்திலிருந்து எழும்ப எட்ஜ் ஆகி டுபிளெசிஸ் கேட்சுக்கு வெளியேறினார். கோலி 8 ரன்களுடனும், ரஹானே ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். .

முன்னதாக முதல் டெஸ்ட் தொடக்க நாயகன் ரோஹித் சர்மா 14 ரன்கள் எடுத்து ரபாடாவின் கடினமான பந்துக்கு எட்ஜ் ஆகி வெளியேறினார். பந்து ஆஃப் அண்ட் மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி சற்றே கூடுதலாக எழும்ப ரோஹித் சர்மா இதனை ஆடாமல் விட முடியாது, எட்ஜ் ஆனது. ஆட்டமிழந்தார். அருமையான பந்து வீச்சு.

பிட்ச் காலையில் வேகப்பந்து வீச்சுக்கு சற்றே சாதகமாக அமைய பிலாண்டர், ரபாடா அருமையாக வீசினர். மயங்க் அகர்வாலுக்கு ஒரு பிளம்ப் எல்.பி.தரப்படவில்லை. களநடுவர் கொடுக்காத போது மூன்றாம் நடுவர் ரிவியூவுக்குச் சென்றார் டுபிளெசிஸ், ஆனால் அது ‘அம்பயர்ஸ் கால்’ என்று களநடுவர் தீர்ப்பை 3ம் நடுவர் ஏற்றுக்கொண்டதாக அமைந்தது. ஆனால் அது பிளம்ப் எல்.பி.டபிள்யூவாகும். பந்து சரியாக லைனில் கால்காப்பைத் தாக்கி ஸ்டம்பை நோக்கிச் செல்கிறது, அது நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது அகர்வாலின் அதிர்ஷ்டம், தென் ஆப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம்.

ஆனால் இதனை மிகச்சரியாகப் பயன்படுத்திய மயங்க் கர்வால் சில பிரமாதமான பவுண்டரிகளை அடித்து 112 பந்துகளில் அரைசதம் எடுத்தார் இதில் 10 பவுண்டரிகள் அடங்கும், அதாவது அரைசதத்தில் 40 ரன்கள் பவுண்டரியிலேயே அடித்திருந்தார்.

87 ரன்களுக்கு வந்த மயங்க் அகர்வால், ஆக்ரோஷ வழிமுறையில் இறங்கி வந்து பவுலர் தலைக்கு மேல் ஒரு சிக்ஸ், பிறகு அடுத்த பந்தே மேலேறி வந்து அதே இடத்தில் இன்னொரு சிக்ஸ் அடித்து 99 ரன்களுக்கு வந்தார், பிறகு பிலாண்டர் பந்தை தேர்ட் மேன் திசையில் பவுண்டரி அடித்து சதம் கண்டார்.

புஜாரா தன் பாணியில் 112 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் டுபிளெசிஸிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். புஜாராவும் அகர்வாலும் சேர்ந்து 138 ரன்கள் சேர்த்தனர்.

சற்று முன் விராட் கோலி கொடுத்த கேட்சை மஹராஜ் தன் பந்து வீச்சில் கோட்டை விட்டார், தப்பினார் விராட் கோலி.

இந்திய அணி 198 ரன்களுக்கு 3 விக்கெட். தென் ஆப்பிரிக்கா அணியில் ரபாடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x