Published : 19 Jul 2015 12:25 PM
Last Updated : 19 Jul 2015 12:25 PM
இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆசிய ஓசியானியா குரூப் 1 போட்டியின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவும், நியூஸிலாந்தும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
2-வது நாளான நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-சாகேத் மைனேனி ஜோடி 3-6, 6-7 (1), 3-6 என்ற நேர் செட்களில் நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடாக்-மார்கஸ் டேனிலஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது. இதனால் நியூஸிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் சோம்தேவ், நியூஸிலாந்தின் ஜோஸ் ஸ்டாட்ஹாமையும், இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸையும் சந்திக்கின்றனர்.
இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக குரூப் பிளே ஆப் சுற்றில் விளையாட தகுதி பெற முடியும். அதனால் இன்றைய ஆட்டத்தில் வென்றாக நெருக்கடியில் களமிறங்குகிறது இந்திய அணி.
ஆனந்த் அமிர்தராஜ் ஏமாற்றம்
நேற்றைய ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ஆனந்த் அமிர்தராஜ், “இரட்டையர் போட்டியில் தோல்வி கண்டது ஏமாற்றமளிக்கிறது.
அதிலும் நேர் செட்களில் தோற்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பிருந்த இரட்டையர் ஆட்டம் 5 செட்கள் வரை நீடிக்கும் என நினைத்தேன்.
எனினும் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு தகர்ந்துவிடவில்லை. நாளைய (இன்றைய) ஆட்டத்தில் சோம்தேவ் எளிதாக ஸ்டாட்ஹாமை வீழ்த்தலாம். ஏனெனில் இதற்கு முன்னர் இருமுறை ஸ்டாட்ஹாமை வீழ்த்தியிருக்கிறார் சோம்தேவ். வீனஸ்-பாம்ப்ரி இடையிலான ஆட்டம்தான் இந்தத் தொடரின் வெற்றியைத் தீர்மானிப்பதாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT