Published : 04 Oct 2019 03:31 PM
Last Updated : 04 Oct 2019 03:31 PM

‘சுவர்’ டீன் எல்கரின் அற்புத சதம், டுபிளெசிஸ், டி காக் அபார பேட்டிங்: பாலோ ஆனைத் தவிர்த்து தெ. ஆ. பதிலடி

விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளை வீழ்த்த திணறி வருகிறது, காரணம் அந்த அணியின் புதிய சுவராகத் திகழும் டீன் எல்கர் சதம் எடுத்து 133 ரன்களுடனும் குவிண்டன் டி காக் 69 ரன்களுடனும் களத்தில் நிற்க தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு பாலோ ஆனைத் தவிர்த்து 303/5 என்று உள்ளது.

டீன் எல்கர் பிரமாதமாக இந்திய ஸ்பின்னர்களைக் கையாண்டார், அவ்வப்போது சில பந்துகள் மட்டையைக் கடந்து சென்றாலும் தேவையான போது தாக்குதல் ஆட்டமும் மற்ற நேரங்களில் நிதானமும் காட்டியதோடு அபாரமான உத்தியுடன் ஆடி சதம் எடுத்தார், டுபிளெசிஸ் தன் பங்குக்கு 103 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்தார்.

இன்று காலை தெம்பா பவுமா, இஷாந்த் சர்மாவின் பெரிய இன்ஸ்விங்கருக்கு காலை முன் நோக்கி நகர்த்தி ஆடாமல் விட்டதையடுத்து கால்காப்பில் வாங்கி எல்.பி. ஆகி 18 ரன்களில் வெளியேறிய பிறகு 115 ரன்களை டுப்ளெசிஸ், எல்கர் ஜோடி 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

இந்த வைடு ஸ்லிப் நிறுத்தும் மோசமான ஒரு பழக்கத்தை கோலி, தோனியிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார், ஒழுங்கான ஸ்லிப்பை நிறுத்தியிருந்தால் டீன் எல்கருக்கு இஷாந்த் வீசிய எழும்பிய பந்து எட்ஜ் ஆனதற்கு கேட் ச் ஆகியிருக்கும். அது என்ன வைடு ஸ்லிப் என்று புரியவில்லை.

டுப்ளெசிஸ் அபார அரைசதம் எடுத்த பிறகு 55 ரன்களில் அஸ்வினின் சாதாரணமான பந்துக்கு லெக் ஸ்லிப்பில் புஜாராவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், தன்னைத் தானே நொந்து கொண்டு வெளியேறினார்.

178/5 என்ற நிலையில் குவிண்டன் டி காக், டீன் எல்கருடன் இணைந்தார். குவிண்டன் டி காக் முதலில் அஸ்வினை லாங் ஆன் மேல் ஒரு பவுண்டரியும் பிறகு அடுத்த பந்தே கவர் திசையில் இன்னொரு பவுண்டரியும் அடித்துத் தொடங்கினர்.

பிறகு ஜடேஜாவை ஒரு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் அடித்த டி காக் தேர்ட்மேனில் தட்டி விட்டு அடுத்த பவுண்டரியை அடித்தார். இடையில் மொகமது ஷமியை மிகப் பிரமாதமான நேர் ஷாட் பவுண்டரி அடித்தார் எல்கர். முக்கிய பவுலர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவும் ஒரு மாற்றத்துக்காகவும் ரோஹித் சர்மாவும் வீசினார், அவரை ஒரு பவுண்டரி அடித்தார் டி காக். பிறகு அஸ்வினை மிகப்பிரமாதமான ஸ்கொயர் ட்ரைவ் பவுண்டரிக்கு அனுப்பிய டி காக் 49 ரன்களுக்கு வந்தார். பிறகு ஜடேஜா ஓவரில் மிட் ஆஃபில் தட்டி விட்டு 79 பந்துகளில் அரைசதம் கண்டார் டி காக். அரைசதத்தைக் கொண்டாட அஸ்வினை மேலும் 2 பவுண்டரிகளை விளாசினார் டி காக்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய டி காக், ஹனுமா விஹாரி ஓவரையும் விட்டு வைக்காமல் இரண்டு அற்புத பவுண்டரிகளை அடித்து மொத்தம் 11 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் என்று அசத்தினார்.

டீன் எல்கர் மிகப்பிரமாதமாக தன் கால்களைப் பயன்படுத்தி அஸ்வின், ஜடேஜா, விஹாரியை ஆடினார், இஷாந்த் சர்மாவின் பந்துகள் சில வேளைகளில் குட் லெந்தில் எழும்பி எல்கரை கொஞ்சம் ஆட்டம் காணச் செய்ததோடு வேகப்பந்து வீச்சில் ஷமி நேர் நேர் தேமா முறைக்குத் திரும்பினார், ஆனால் டைட்டாக வைத்திருந்தார்.

தென் ஆப்பிரிக்கா பாலோ ஆனைத் தவிர்த்து 303/5 என்று உள்ளது.

இந்திய தரப்பில் அஸ்வின் 101 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் பிட்சில் ஜடேஜா, அஸ்வினை எதிர்கொண்டு பாலோ ஆனைத் தவிர்த்திருப்பது தென் ஆப்பிரிக்க அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கும்,

இந்தியாவைப் பொறுத்த வரையில் டீன் எல்கரை எப்படி வீழ்த்துவது என்று தெரியாமல் திணறுகின்றனர் என்றே கூற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x