Published : 03 Oct 2019 06:30 PM
Last Updated : 03 Oct 2019 06:30 PM

இந்தியா 502/7 டிக்ளேருக்குப் பிறகு வேலையைக் காட்டத் தொடங்கியது பிட்ச்: எதிர்பார்த்தபடி தென் ஆப்பிரிக்கா திணறல்

மயங்க் அகர்வாலின் இரட்டைச் சதத்துடன் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்ற ஆட்ட முடிவில் தென். ஆப்பிரிக்கா சுவர் டீன் எல்கர் 27 ரன்களுடனும் பவுமா 2 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

அஸ்வின், ஜடேஜா வீசத் தொடங்கியவுடனேயே பிட்ச் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது, பந்துகள் திரும்பி, எழும்பி, தாழ்ந்து பிரச்சினைகளைக் கொடுக்க நாளை 3ம் நாளில் இந்தப் பிட்ச் மேலும் அபாயகரமானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின், 13 பந்துகளில் எய்டன் மார்க்ரம் விக்கெட்டை பவுல்டு மூலம் கைப்பற்றினார். மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே பந்து புகுந்து சென்றது.

இன்று காலை ரோஹித் சர்மாவுக்கு கேட்சை விட்டனர், நேற்று ஒரு ரன் அவுட் வாய்ப்பைக் கோட்டை விட்டனர், இன்று ரோஹித் அடிக்கும் மூடில் இறங்கி அடித்து ஆடத் தொடங்கினார். ஒன்றுமில்லாத பிட்சில் ரோஹித் சர்மா 71 பந்துகளில் 61 ரன்களை மேலும் சேர்த்து ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார் 317 ரன்கள் முதல் விக்கெட் கூட்டணி 3வது மிகப்பெரிய தொடக்க கூட்டணி ரன் எண்ணிக்கையாக அமைந்தது.

இந்தப் பிட்சிலும் புஜாரா, விராட் கோலி, ரஹானே சொதப்பி குறைந்த ரன்களில் வெளியேறினர். சிக்சர்களில் ரோஹித் சர்மா 38 டெஸ்ட் சிக்சர்களுடன் நவ்ஜோத் சிங் சித்துவடன் 9ம் இடத்தில் இணைந்தார்.

அப்போதே பிட்ச் கொஞ்சம் வேலையைக் காட்டத் தொடங்கியது, ஆனால் அஸ்வின் வந்தவுடன் மார்க்ரமுக்கு ஒரு பந்து திரும்பி ஸ்டம்பைத் தாக்க குழி பிட்ச் உறுதியானது. டி புருயினுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வந்த அஸ்வின் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு சஹாவின் அருமையாக கேட்சாக முடிந்தது.

ஜடேஜா இரவுக்காவலன் பியட் விக்கெட்டை வீழ்த்தினார். டீன் எல்கர் வலுவான உத்தியுடன் அவ்வளவாக சிரமம் இல்லாமல் ஆடி வருகிறார்.

வழக்கமான ஒரு இந்திய டெஸ்ட் பிட்ச், டெஸ்ட் போட்டியாகவே இது செல்கிறது, இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்று ஒரு போட்டியில் வெல்ல முடிவதற்கான பிட்சை அவர்கள் அனுமதிக்கின்றனர், ஆனால் இங்கு நாம் 500 அடித்தால் அவர்கள் 50தான் அடிக்க முடியும் என்று பிட்ச் அமைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை.

மேலும், உலகிலேயே தலை சிறந்த வேகப்பந்து வீச்சு என்று மார்தட்டும் நம் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் நிபுணர்கள் இத்தகைய வேகப்பந்து வீச்சை வைத்துக் கொண்டு நியாயமான ஒரு பிட்சை போட்டால் என்ன? என்று கேள்வி எழுப்புவதில்லை. இது ஸ்பின் பிட்சும் அல்ல, அதாவது உண்மையான ஸ்பின் பிட்ச் 4ம் நாளிலிருந்துதான் தன் வேலையைக் காட்டும் ஆனால் 2ம் நாள் மதியத்திலிருந்தே காட்டுகிறது என்றால் உடையும் பிட்ச்களை போட்டு பெரிய அணிகளை உடைத்து வெற்றிக் கொக்கரிப்பு செய்வதில் என்ன பெருமை இருக்கிறது என்று புரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x