Published : 03 Oct 2019 01:52 PM
Last Updated : 03 Oct 2019 01:52 PM

சதமடித்து சாதனைகளைக் குவித்த ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி: சுவாரஸ்யத் தகவல்கள் 

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி சதம் அடித்து 300 ரன்களுக்கு மேல் குவித்து பல சாதனைகளைப் படைத்துள்ளனர்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஜோடி 300 ரன்களுக்கு மேல் குவிப்பது இது மூன்றாவது முறையாகும்.

இந்தியா, தென் ஆப்பிரிக்க இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று மழை காரணாக போட்டி 59.1 ஓவர்களில் நிறுத்தப்பட்டது. ரோஹித் சர்மா 115 ரன்களுடனும், அகர்வால் 84 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இருவரும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அகர்வால் அபாரமாக சதம் அடித்து டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். இருவரின் அதிரடியான ஆட்டத்தால் முதல் விக்கெட்டுக்கு இருவரும் 300 ரன்களுக்குமேல் சேர்த்தனர்.

ரோஹித் சர்மா 176 ரன்கள் சேர்த்திருந்தபோது கேசவ் மகராஜ் பந்துவீச்சில் டீக்காகல் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 317 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த புஜாரா 6 ரன்னில் பிலாண்டர் பந்துவீச்சில் போல்டாகினார். கேப்டன் விராட் கோலி 20 ரன்னில் தமிழரான முத்துசாமி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அகர்வால் 172 ரன்னிலும், ரஹானே 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையே ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் தொடக்கக் கூட்டணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர். அது குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

  • ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்தனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த தொடக்கக் கூட்டணி 300 ரன்களுக்கு மேல் சேர்த்தது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் வினு மன்கட், பங்கஜ் ராய் (413ரன்கள்) நியூஸிலாந்துக்கு எதிராக 1956-ல் சேர்த்தனர். அடுத்ததாக 2006-ல் பாகிஸ்தானுக்கு எதிராக திராவிட், சேவாக் கூட்டணி 410 ரன்கள் சேர்த்திருந்தனர்.
  • தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் தொடக்கக் கூட்டணி எனும் சிறப்பை மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஜோடி பெற்றது.
  • கடந்த 1996-97-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கிறிஸ்டன், ஹட்ஸன் தொடக்க ஜோடி 236 ரன்கள் சேர்த்திருந்ததே அதிகமாக இருந்தது. அதை ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி முறியடித்தது.

  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் அடித்த முதல் தொடக்க ஜோடி ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் இணை என்ற பெருமையைப் பெற்றனர்.
  • இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியிலே தொடக்க ஜோடி இருவரும் சதம் அடிப்பது இதுதான் முதல் முறையாகும். அதேசமயம், தொடக்க ஜோடி இருவரும் சதம் அடிப்பது இது 10-வது முறையாகும்.
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவைச் சேர்ந்த தொடக்கக் கூட்டணியின் அதிகபட்சம் 218 ரன்களாகும். கடந்த 2004-ம் ஆண்டு கான்பூரில் நடந்த ஆட்டத்தில்கவுதம் கம்பீர், சேவாக் இந்த சாதனையை வைத்திருந்தனர். ஆனால், இப்போது ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி அதை 15 ஆண்டுகளுக்குப்பின் 317 ரன்கள் சேர்த்து முறியடித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x