Published : 01 Oct 2019 09:30 PM
Last Updated : 01 Oct 2019 09:30 PM

நானும் பினிஷர்தான் என்று பலரக ஷாட்களுடன் அசத்தி பவர் ஹிட்டிங் காட்டிய தினேஷ் கார்த்திக்: பெங்காலை நொறுக்கிய தமிழ்நாடு

ஜெய்ப்பூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே ட்ராபி ஒருநாள் போட்டியில் தமிழக அணி, பெங்கால் அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் தன் 4வது தொடர் வெற்றியைப் பதிவு செய்து புள்ளிகள் அட்டவணயில் 16 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

தினேஷ் கார்த்திக் (97), ஷாருக் கான் (69 நாட் அவுட்) இருவரும் சேர்ந்து பெங்கால் பவுலர்களை மைதானம் நெடுகச் சிதறடித்து 286 ரன்களைக் குவித்தனர். அதுவும் கடைசி 9 ஒவர்களில் 135 ரன்களை விளாசியது தமிழ்நாடு அணி.

கடைசி 5 ஓவர்களில் தினேஷ் கார்த்திக் ‘நானும் ஒரு பினிஷர்’தான் என்பதற்கிணங்க தெள்ளத் தெளிவான அதிரடியைக் காட்டினார். நேர் ஷாட்கள், தேர்ட்மேனுக்கு மேலு டிவில்லியர்ஸ் பாணியில் ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து கொண்டு பைன்லெக்கில் தூக்கி அடிப்பது, லெக் ஸ்டம்ப்ல் நகர்ந்து கொண்ட் ஆஃப் திசையில் வெளுப்பது என்று தன்னிடம் உள்ள பலவகையான ஷாட்களை வெளிப்படுத்தி 62 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 97 ரன்களை விளாசித் தள்ளினார்.

இவருடன் ஆடிய ஷாரூக் கான் 45 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 69 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். தொடர்ந்து ஆடிய பெங்கால் அணியில் ஷாபாஸ் 107 ரன்கள் எடுத்து ஆட்டத்தை உயிரோட்டமாக வைத்திருந்தாலும் பெங்கால் அணியால் வெற்றி பெற முடியவில்லை 212 ரன்களுக்குச் சுருண்டது.

முன்னதாக தமிழ்நாடு அணி 36.2 ஓவர்களில் 123/5 என்று தடுமாறிய போதுதான் தினேஷ் கார்த்திக், ஷாரூக் கான் ஜோடி இணைந்து 12.3 ஓவர்களில் 153 ரன்களை விளாசித் தள்ளினர்.

பெங்கால் பவுலர்கள் முன்னதாக சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர், ஜெகதீசன் 5வது ஓவரில் ஆட்டமிழந்தவுடன் இது தொடங்கியது. டாப் ஆர்டரில் பாபா அபராஜித் மட்டுமே அதிகபட்சமாக 34 ரன்களை எடுத்தார்.

பெங்கால் அணி இலக்கைத் துரத்திய போது நடராஜன், விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த முருகன் அஸ்வின் ஒரு ரன் அவுட்டை நிகழ்த்த பெங்கால் அணியின் டாப் ஆர்டர் ஸ்கோர் இவ்வாறு இருந்தது: 4,1,8,1,3 என்ரு 5 வீரர்கள் ஆட்டமிழக்க 21/5 என்று சரிவு கண்டது.

ஆனால் அதன் பிறகு ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அகமது 131 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் அபாரமாக சதம் எடுத்து 107 ரன்களை எடுத்து 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தாலும் வெற்றி பெற செய்ய முடியவில்லை. தமிழக அணியில் பாபா அபராஜித், விக்னேஷ், நடராஜன், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பெங்கால் அணி 45.3 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தமிழ்நாடு அணி 4 போட்டிகளிலும் வென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும் குஜராத் 14 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x