Published : 01 Oct 2019 08:32 PM
Last Updated : 01 Oct 2019 08:32 PM

வலுவான இந்திய அணி; குழி பிட்ச்: இரட்டைப் பயத்தில் தென் ஆப்பிரிக்கா- ஒரு போட்டியிலாவது வெல்லுமா?

நாளை (புதன், 2-10-19) தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் தொடங்குகிறது, கன மழை காரணமாக பிட்ச் தயாரிப்பில் பிணக்கு ஏற்படும், பந்துகள் மெதுவாகத் திரும்பும் ஸ்பின் பிட்ச் ஆகத்தான் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அல்லது பிட்ச் காயாமல் ஈரப்பதம் பெரிய அளவில் தக்கவைக்கப்பட்டால் பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2016-17-ல் முதல் நாளே பந்துகள் திரும்புவதைப் போன்று இந்தப் பிட்சிலும் பந்துகள் திரும்ப வாய்ப்புள்ளது.

அப்படித் திரும்பினால் தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்கெனவே இருக்கும் குழிபிட்ச் பயம் மேலும் அதிகரித்து ஏற்கெனவே இருக்கும் ஸ்பின் பலவீனம் இன்னும் அதிகரிக்கலாம். தென் ஆப்பிரிக்க அணியில் டுபிளேசிஸ், டி காக் தவிர இந்தியப் பிட்ச்களில் அதிகம் அனுபவம் இல்லாத வீரர்கள் இருப்பதாலும் இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா இருவருமே இருப்பதாலும் நிச்சயம் ஒரு ஸ்பின் ஆதரவு ஆட்டக்களமே இருக்கும் என்று தென் ஆப்பிரிக்கா அச்சப்படுகிறது.

மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகவும் இது இருப்பதால் இந்திய அணி புள்ளிகளுக்காக எப்படியாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்று தங்களுக்குச் சாதகமாகவே பிட்சை அமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதுவும் 2015-16 தொடரை நிச்சயம் மறக்க மாட்டார்கள் தென் ஆப்பிரிக்க அணியினர், முழுதும் குழிப்பிட்ச்சைப் போட்டு 4 டெஸ்ட் போட்டிகளில் 3-0 என்று இந்தியா வெற்றி பெற்றது.

இந்தமுறை இந்திய அணி விராட் கோலி தலைமையில் வலுவாக உள்ளது, பல வெற்றிகளைக் குவித்து வருகிறது, உள்நாட்டுத் தொடர்களில் 10 தொடர்களில் வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது ஒரு பின்னடைவே. ஆனாலும் வலுவான இஷாந்த் சர்மா, முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா என்று பந்து வீச்சு வரிசை உள்ளது. இந்தியப் பிட்ச்களில் ரிவர்ஸ் ஸ்விங் வாய்ப்புள்ளதால் தென் ஆப்பிரிக்காவுக்கு ஸ்பின் அச்சுறுத்தலுடன் ரிவர்ஸ் ஸ்விங் அச்சுறுத்தலும் உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியில் வலுவான தொடக்க வீரர் டீன் எல்கர் இருக்கிறார், எய்டன் மார்க்ரமுக்கு இது இந்தியப் பிட்ச்களில் அறிமுகத் தொடர், ஆகவே இவருக்குக் கடினம், ஆனால் இவர் பயிற்சி ஆட்டத்தில் 118 பந்துகளில் சதம் கண்டு நல்ல பார்மில் இருக்கிறார். டுப்ளெசிஸ், தெம்பா பவுமா, குவிண்டன் டி காக் ஆகியோருடன் ஓரளவுக்கு மன உறுதியுடன் ஆடக்கூடிய டெய்ல் எண்டரான வெர்னன் பிலாண்டர் ஆகியோர் உள்ளனர்.

பவுலிங்கில் பிலாண்டர், இங்கிடி, ரபாடா, மஹராஜ் உள்ளனர். தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு சவால் நிச்சயம், அவர் இதை எப்படி எதிர்கொண்டு அணி எதிர்பார்க்கும் இன்னொரு சேவாகாக வருவாரா என்பதில்தான் இந்த டெஸ்ட் போட்டியில் ஆவல் அதிகமாகியுள்ளது.

ஜடேஜா இன்னும் 2 விக்கெட்டுகள் எடுத்தால் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய 10வது இந்திய டெஸ்ட் வீரராகத் திகழ்வார். 44வது டெஸ்ட் போட்டியில் அவர் 200 விக்கெட்டுகளை வீழ்த்துபவராக இருப்பார். அஸ்வின் 37 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டி சாதனையை தன் வசம் வைத்துள்ளார், ஹர்பஜன் 46 டெஸ்ட் போட்டிகளில் 200 மைல்கல்லை எட்டினார்.

இந்திய பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது, விராட் கோலி அவர்களுக்கு இந்தப் பிட்ச்களில் மிகப்பெரிய அச்சுறுத்தல்தான், ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா இங்கு வந்த போது விராட் கோலி 47 ரன்களையே எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின், ஜடேஜா அச்சுறுத்தலுடம் குழிபிட்ச் அச்சுறுத்தலும் சேர தென் ஆப்பிரிக்கா டுபிளெசிஸ் என்ற ‘ஃபைட்டர்’ மட்டுமே வலுவாகத் தெரிய ரபாடா, பிலாண்டர், லுங்கி இங்கிடி, மஹராஜை வைத்துக் கொண்டு ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வென்று விட்டால் அதுவே பெரிய சாதனைதான்.

அணி விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, சஹா, அஸ்வின், ஜடேஜா, இஷாந்த், ஷமி.

தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், டீன் எல்கர், டி புருய்ன், பவுமா, டி காக், பிலாண்டர், ரபாடா, கேசவ் மஹராஜ், இங்கிடி/நோர்ட்யே, டேன் பியட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x