Published : 23 Jul 2015 03:33 PM
Last Updated : 23 Jul 2015 03:33 PM
சிட்டகாங்கில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று வங்கதேச அணி தங்களது முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 78 ரன்கள் முன்னிலை பெற்றது.
நேற்று 2-ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட 179/4 என்று இன்று தொடங்கிய வங்கதேசம் தொடக்கத்தில் முஷ்பிகுர் ரஹிம் விக்கெட்டை அவரது சொந்த எண்ணிக்கையான 28 ரன்களில் இழந்தது. 5 பவுண்டரி 1 சிக்சர் அடித்திருந்த அவர் டேல் ஸ்டெய்ன் பந்தில் கால்காப்பில் வாங்கினார்.
நடுவர் ஜோ வில்சன் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்கா மேல்முறையீடு செய்ய, பந்து மட்டையின் உள்விளிம்பில் படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு ஸ்டம்பை தாக்கும் பந்து அது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ஸ்விங் எதுவும் இல்லாததால் ஷார்ட் பிட்ச் பவுலிங்குக்குத் தஞ்சமடைந்தார் ஸ்டெய்ன். லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் மிகவும் நிதானமாக, பொறுப்புடன் ஆடி 6-வது விக்கெட்டுக்காக 82 ரன்களைச் சேர்த்தனர்.
ஷாகிப் அல் ஹசன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரான 47 ரன்களை எடுத்து ஆஃப் ஸ்பின்னர் ஹார்மரின் அவ்வளவாக ஷார்ட் பிட்ச் அல்லாத பந்தை புல் ஆட முயன்றார் ஆனால் அவர் கொடியேற்றினார். டுமினியிடம் எளிதான கேட்ச் ஆனது.
விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸின் தடுப்பாட்டமும், ரன்கள் எடுக்க அவர் எடுத்துக் கொண்ட பந்து தேர்வும் அபாரம். அதுவும் பிலாண்டரின் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பிலிருந்து பிக் செய்து, லெக் திசையில் அடித்த பவுண்டரி இந்த வீரரிடம் வேறு வகையான பேட்டிங் திறமை இருப்பதைக் காட்டியது. 102 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஹார்மர் பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷாகித் களமிறங்கி பேட்டை சுழற்றினார், ஹார்மரின் ஒரே ஓவரில் ஒரு எட்ஜ் பவுண்டரியுடன் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் விளாசினார். அவர் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.
தைஜுல் இஸ்லாம் (9), முஸ்தபிசுர் ரஹ்மான் (3) ஆகியோரை டேல் ஸ்டெய்ன் வீழ்த்தி 399 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
117-வது ஓவர் முதல் பந்தில் வங்கதேசம் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெய்ன், மற்றும் ஹார்மர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிலாண்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
2-வது இன்னிங்ஸை ஆடிவரும் தென் ஆப்பிரிக்கா இன்று இன்னமும் குறைந்தது 30 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT