Published : 27 Sep 2019 01:19 PM
Last Updated : 27 Sep 2019 01:19 PM

யோ-யோ டெஸ்ட்டில் தேர்வாகியும் என்னை நீக்கியது நியாயமில்லை; இன்னொரு உலகக் கோப்பையில் விளையாடி இருப்பேன்: யுவராஜ் சிங் வேதனை

யுவராஜ் சிங் : கோப்புப்படம்

புதுடெல்லி

இந்திய அணி நிர்வாகம் தனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்திருந்தால் என்னால் மற்றொரு உலகக்கோப்பை போட்டியில் விளையாடி இருக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வேதனையுடன் குறிப்பிட்டார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங்கின் பங்களிப்பு 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியிலும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியிலும் மறக்க முடியாது. 2007-ம் ஆண்டு டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் அடித்த 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கின் ரன் குவிப்பு போன்றவை இந்திய அணி இரு உலகக்கோப்பைகளை வெல்ல முக்கியக் காரணம்.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போன்றவற்றிலும் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது.

யுவராஜ் சிங் டெஸ்ட் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து இதுவரை 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை யுவராஜ் சிங் அறிவித்தார்.

இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு யுவராஜ் சிங் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

''2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குப் பின் என்னால் மற்றொரு உலகக்கோப்பை போட்டியில் விளையாடி இருக்க முடியும். அந்த உடல்தகுதியும் இருந்தது. இந்திய அணி நிர்வாகம் நிர்ணயித்த யோ-யோ உடல்தகுதித் தேர்வில் நான் தேர்வாகியும், என்னை 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குத் தேர்வு செய்யவி்ல்லை.

இந்திய அணி நிர்வாகத்தில் இருந்தோர், என்னைச் சுற்றி இருந்தோர் எனக்கு ஆதரவு அளித்திருந்தால், என்னால் மற்றொரு உலகக்கோப்பையில் நிச்சயம் விளையாடி இருக்க முடியும். என்னுடைய கிரிக்கெட்டை நான் எனக்குரிய ஸ்டைலில் விளையாடினேன். எனக்கென்று யாரும் காட்ஃபாதர் கிடையாது.

2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 2 போட்டிகளில் நான் ஆட்டநாயகன் விருது பெற்றேன். இலங்கைத் தொடருக்கு முன்பாக காயம் ஏற்பட்டதால், அதில் இருந்து மீண்டுவர தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் நான் அணியில் இருந்து நீக்கப்படுவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

என்னுடைய 36 வயதில் நான் யோ-யோ தகுதித் தேர்வுக்குத் தயாராகி அதில் தேர்வானேன். உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுகிறேன் என்று அணி நிர்வாகத்திடம் தெரிவித்தேன். என்னுடைய வயதுக்கு யோ-யோ தகுதித் தேர்வில் தேர்வாவது கடினம். அதைச் செய்திருக்கிறேன் என்று கூறினேன். ஆனால் என்னை எளிதாக நிராகரித்துவிட்டார்கள்.

16 ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய ஒரு வீரரை மரியாதை நிமித்தமாக அழைத்து அமரவைத்து சூழலை விளக்கி இருப்பதற்குப் பதிலாக நீக்கியது என்னைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டம். ஜாகீர்கான், வீரேந்திர சேவாக் மட்டுமின்றி யாரிடமும் அணி நிர்வாகம் பேசவில்லை.

என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது சரியான நேரத்தில்தான் முடிவு எடுத்துள்ளேன்.

என் மனதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உலகக்கோப்பை தொடங்கியவுடன், அணி சிறப்பாக முன்னேற வேண்டும் என்று எண்ணினேன். இந்தியாவுக்கு வெளியே சென்று கிரிக்கெட் விளையாட விரும்பினேன். ஆனால் வாழ்க்கை எளிதாக என்னை முன்னெடுக்கவில்லை, அழுத்தம் மிகுந்ததாக இருந்தது.

இந்தியாவுக்கு வெளியே சென்று நான் விளையாட வேண்டுமென்றால் நான் ஓய்வு பெற வேண்டும் என்பதால், நான் ஓய்வை அறிவித்தேன். சரியான நேரத்தில்தான் முடிவெடுத்தேன். இளம் வீரர்கள் அணியை வழிநடத்திச் செல்ல வழிவிட்டு இருக்கிறேன். ஆனால்,என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் காலம், சிறிது சுமையாகவே இருந்தது’’.

இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x