Published : 26 Sep 2019 06:06 PM
Last Updated : 26 Sep 2019 06:06 PM
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் முதன் முதலாக தொடக்க வீரராகக் களமிறங்க தான் கெஞ்சிக் கூத்தாடியதாகத் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 100 சதங்களை எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையைக் கைவசம் வைத்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். தொடக்கத்தில் சில ஒருநாள் போட்டிகளில் சச்சின் 5ம் நிலையில் அல்லது 4ம் நிலையில்தான் களமிறங்கி வந்தார், அதாவது 60க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் சச்சின் நடுவரிசையில்தான் களமிறங்கி வந்தார்.
ஆனால் 1994ம் ஆண்டு நியூஸிலாந்திற்கு இந்தியா பயணம் மேற்கொண்ட போது முதன் முதலில் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கியது இந்திய ஒருநாள் கிரிக்கெட் சரித்திரத்தையும் சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையையும் வேறு வகையில் மாற்றியது.
இந்நிலையில் லிங்க்டு இன் மூலம் வெளியிட்டுள்ள வீடியொவில் சச்சின் டெண்டுல்கர் அத்தகைய தருணம் பற்றி பகிர்ந்து கொண்டார்:
“நான் முன்னால் களமிறங்கி பவுலர்களைப் பதம் பார்க்க ஆசை கொண்டேன். ஆனால் அதற்காக கெஞ்சிக் கூத்தாடி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று மன்றாடித்தான் அந்த வாய்ப்பைப் பெற வேண்டியிருந்தது.
1994-ல் நான் முதன் முதலில் தொடக்க வீரராக ஆக்லாந்தில் களமிறங்கிய போது அனைத்து அணிகளும் அதுவரை ஒருநாள் போட்டிகளில் தொடக்கத்தில் பாரம்பரிய பேட்டிங் அணுகுமுறையையே கடைபிடித்து வந்தனர். ஆனால் நான் இறங்கி வேறு மாதிரி யோசித்தேன், அடித்து ஆடுவது , பவர் ப்ளேயில் ரன் குவிக்கும் உத்தியைக் கடைபிடித்தேன்.
அந்தப் போட்டியில் 49 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தேன். எனவே நான் இன்னொரு முறை அந்த வாய்ப்புக்காக கேட்காமலேயே தொடர்ந்தேன். நானே தொடங்க வேண்டும் என்று அனைவரும் விரும்பினர். ஆகவே என்ன கூற விரும்புகிறேன் என்றால், தோல்வியைக் கண்டு அச்சம் அடைந்து விடக்கூடாது என்பதையே” என்றார் சச்சின் டெண்டுல்கர்.
தொடக்க வீரராக இறங்கி முதல் 5 போட்டிகளில் டெண்டுல்கர், 82, 63, 40, 63, 73 என்று வெளுத்துக் கட்டினார். பிறகு கொழும்புவில் சிங்கர் ட்ராபியில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் சதத்தை எடுத்தார் சச்சின். இந்த இன்னிங்சில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் மெக்டர்மட் பந்தை நடந்து வந்து மிட் விக்கெட் மேல் அடித்த ஹை பிளிக் சிக்ஸ் காலாகாலத்துக்கும் நினைவிலிருந்து அகற்ற முடியாத ஷாட் ஆகும்.
அதன் பிறகு சச்சின் ஆடும்போதெல்லாம் அலுவலகத்திற்கு லீவு போடுவோர் எண்ணிக்கை அதிகரித்தது வேறு கதை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT