Last Updated : 24 Sep, 2019 01:21 PM

1  

Published : 24 Sep 2019 01:21 PM
Last Updated : 24 Sep 2019 01:21 PM

அந்தநாள் ஞாபகம்; பாகிஸ்தானுடன் பரபரப்பான கடைசி ஓவர்: தோனி தலைமையில் இந்திய அணிக்கு முதல் டி20 உலகக் கோப்பை 

2007 உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி

கிரிக்கெட் காதலர்கள் யாரும், 2007, செப்டம்பர் 24-ம் தேதி ஜோகன்ஸ்பர்க், வான்டரர்ஸ் அரங்கை மறக்கவே மாட்டார்கள். நினைவில் வைத்திருக்கக் கூடிய தருணம் அது...ஆம், முதலாவது டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி அபாரமாக வென்று சாதனை படைத்தது.

நீண்ட தலைமுடியுடன் தோனி, முழுவதும் இளம் வீரர்கள், உற்சாகம் பீறிடும் வகையில் பந்துவீச்சு, ஃபீல்டிங், தேவைக்கு ஏற்பட அதிரடி ஆட்டம் என அனைத்தும் கலந்த கலவையாக இந்திய அணி இருந்தது .

பரபரப்பான இறுதி ஆட்டம், அதிலும் பாகிஸ்தானுடன் ஃபைனல் என்றால் கேட்கவா வேண்டும். தொடக்கம் முதல் கடைசி ஓவரை வரை போட்டியை பார்த்த அனைவரும் இருக்கையின் நுனியில் இருந்தனர் என்றால் மிகையாகாது.

அந்த உலகக்கோப்பை குறித்த சிறிய ஃப்ளாஷ்பேக்...

2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. மொத்தம் 12 அணிகள் போட்டியிட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் குரூப் டி பிரிவில் இடம் பெற்று இருந்தன. லீக் சுற்றிலும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி 6 புள்ளிகள் பெற்றது.

அதன்பின் சூப்பர் 8 சுற்றில் குரூப் ஈ பிரிவில் இந்திய அணியோடு, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றன. இந்தச் சுற்றில் 3 ஆட்டங்களில் இந்திய அணி 2 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதியது. ஆஸ்திரேலிய அணியில் இருந்த வீரர்கள் அனைவரும் சர்வதேச அணிகளுக்கு சவால் விடுக்கக் கூடியவர்கள்.

கில்கிறிஸ்ட், ஹேடன், ஹாட்ஜ், சிம்மன்ஸ், ஹசி, கிளார்க், ஹேடின், பிரட்லீ, மிட்ஷெல் ஜான்ஸன் என பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் மிரட்டும் வீரர்கள் இருந்தனர். அரையிறுதியில் யுவராஜ் சிங்கின் அதிரடியான 70 ரன்களால் இந்திய அணி 20 ஓவர்களி்ல் 5 விக்கெட் இழப்புக்கு188 ரன்கள் சேர்த்து.

189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

மேத்யூ ஹேடன் மட்டும் 62 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இந்தியத் தரப்பில் ஸ்ரீசாந்த், இர்பான் பதான், ஜோகிந்தர் சர்மா தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

மறுபுறம், நியூஸிலாந்தை வீழ்த்திய பாகி்ஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

செப்டம்பர் 24-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களில் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இந்திய அணி அபாரமாக கோப்பையை வென்றது.

இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. யூசுப் பதான் (15), உத்தப்பா (8), யுவராஜ் சிங் (14) தோனி (6) என விக்கெட்டுகளை இழக்க ரசிகர்கள் நம்பிக்கை இழந்தார்கள்.

ஆனால், ஒருபுறம் கவுதம் கம்பீர் நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்து 54 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 30 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.

158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே முகமது ஹபீஸ் ஆட்டமிழக்க, 3-வது ஓவரில் கம்ரான் அக்மல் டக்அவுட்டில் வெளியேறினர். இரு பெரிய விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்திய ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகி்ஸ்தான் வீரர்கள் ஷோயிப் மாலிக், அப்ரிடி ஆகியோரும் ஜொலிக்கவில்லை. அதன்பின் விக்கெட்டுகள் சரிய வெற்றி இந்திய அணியின் பக்கம் நகர்ந்தது. ஆனால், கடைசிவரை மிஸ்பா உல் ஹக் மட்டும் தொடர்ந்து போராடினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. பாகிஸ்தானிடம் ஒருவிக்கெட் மட்டுமே மீதம் இருக்கிறது. மிஸ்பா உல் ஹக், முகமது ஆசிப் மட்டுமே களத்தில் இருக்கிறார்கள்.

கடைசி ஓவரை அனுபவமில்லாத ஜோகிந்தர் சர்மாவிடம் தோனி அளித்தார். முதலிரண்டு பந்துகளை வீணாக்கிய மிஸ்பா , 3-வது பந்தில் அப்சைடில் சிக்ஸர் அடித்து பரபரப்பை எகிறச் செய்தார்.

கடைசி 4 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை. 4-வது பந்தை ஜோகிந்தர் சர்மா வீசும் முன்னர் தோனி அவரிடம் சென்று ஏதோ பேசினார். அதன்பின் நன்றாக மூச்சை இழுத்துவிட்டு, ஜோகிந்தசர் சிங் ஆப்சைடு விளக்கி ஸ்லோ பாலாக வீசினார்.

மிஸ்பா உல் ஹக் ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்று பின்புறம் தூக்கி அடித்தார். சிக்ஸர் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்டுமேன் திசையில் நின்றிருந்த ஸ்ரீசாந்த் கையில் கேட்ச்சாகவும், வெற்றியாகவும் மாறியது.

ஜோகிந்தர் சர்மா பார்த்து ஓடிவந்த தோனி அவரைக் கட்டி அணைத்து, தூக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்திய அணி தனது முதலாவது டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் அபாரமாக வென்றது.

அழகிய அந்த தருணத்தைக் கடந்து ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்னும் அந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் நினைவில் இருக்கும். உலகக் கோப்பை வென்ற அந்த தருணத்தை நினைவுகூர்ந்து பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x