Published : 29 Jul 2015 06:12 PM
Last Updated : 29 Jul 2015 06:12 PM
தான் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்பதை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் தனக்கு வழங்கப்படவில்லை என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் இது குறித்து அளித்த பேட்டியில் கூறும்போது, “ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சீரான முறையில் ரன்களை எடுத்து வருகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் கூட ரன்கள் எடுத்தேன்.
ஆனால், 2012-ம் ஆண்டு 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் நான் சோபிக்கவில்லை என்பது உண்மைதான், 2015-லும் இதே கதைதான் தொடர்ந்தது. இதனால் டெஸ்ட் போட்டி அணியில் இருக்கும் அளவுக்கு எனக்கு அனுபவம் போதாது என்று கூற முடியாது.
ஒரு டெஸ்ட் வீரராக என்னை நிரூபிக்க போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மிகவும் நெரிசலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிடையே, டெஸ்ட் போட்டி ஆடும் போது ஓரிரு போட்டியை வைத்து ஒருவரது திறமையை எடைபோடலாகாது.
நான் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவேண்டும் என்று கூறவில்லை, 2 அல்லது 3 போட்டிகள் எனக்கு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள். நான் ரன்கள் எடுக்கவில்லையெனில் என்னை அதன் பிறகு ஒருபோதும் தேர்வு செய்ய வேண்டாம்.
டெஸ்ட் மட்டத்தில் சீராக ரன் எடுப்பதற்கான திறமை என்னிடம் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். எனவே வாய்ப்பு அளிக்க வேண்டும்.
உள்நாட்டு போட்டிகள் எனக்கு டெஸ்ட் மட்டத்தில் இடம் கிடைக்க சிறந்த நடைமேடை அமைத்துக் கொடுக்கும். நான் டெஸ்ட் இடத்திற்காக போராடுகிறேன். தென் ஆப்பிரிக்க அணி இங்கு டெஸ்ட் போட்டிகளில் ஆட வரும் போது நான் 4 அல்லது 5 ரஞ்சி போட்டிகளில் ஆடவிருக்கிறேன்” என்றார்.
2010-ல் டெஸ்ட் அறிமுகப் போட்டியில் கொழும்புவில் சதம் கண்டார் ரெய்னா. அதன் பிறகு உதிரி உதிரியாக 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ரெய்னா நீக்கப்பட்டார். 6 இன்னிங்ஸ்களில் 32 ரன்களையே ரெய்னா எடுத்திருந்தார்.
2011-ம் ஆண்டு மே.இ.தீவுகள் தொடரிலிம் பிறகு இங்கிலாந்து தொடரிலும் 7 டெஸ்ட் போட்டிகள் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் 13 இன்னிங்ஸ்களில் 337 ரன்களை 25.92 என்ற சராசரியில் எடுத்தார்.
2012-ல் நியூஸிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரெய்னா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் அவரோ 58 ரன்களை மட்டுமே எடுத்தார். கடைசியாக டெஸ்ட் அணிக்கு அவர் மீண்டும் அழைக்கப்பட்ட போது சிட்னியில் இரு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆனதும் நாம் கவனிக்கத் தக்கது.
இந்நிலையில் போதிய வாய்ப்புகள் வழங்கவில்லை என்று ரெய்னா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT