Published : 16 Sep 2019 06:06 PM
Last Updated : 16 Sep 2019 06:06 PM
பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கி கடும் அவமானங்களைச் சந்தித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் முன்பாக கண்ணீர் விட்டு அழுது, தந்தை இவரது கிட் பேக்கை கார் ஷெட்டில் தூக்கி எறிந்து வெறுப்பைக் காட்ட ஸ்மித்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்றே பலரும் கருதினர், மக்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுத்த பிறகே பெரிய மன உறுதி இருக்கும் ஒருவர்தான் இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
இந்நிலையில் உலகக்கோப்பை முதலே ஸ்மித் மீது இங்கிலாந்து ரசிகர்கள் காட்டம் காட்டி வந்தனர், இந்திய ரசிகர்களும் காட்டம் காட்டிய போது விராட் கோலி மிக அருமையான ஒரு பாராட்டத்தக்க செயலில் ஸ்மித்தின் கையை உயர்த்தி ‘ஏன்?’ அவரை ஊக்குவியுங்கள் என்ற செய்கையினை மேற்கொண்டார். இது பலராலும் பாராட்டப்பட்டது.
மீண்டும் ஆஷஸ் தொடர் தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து ரசிகர்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்தினர். ஏமாற்றுக்காரர் என்று வசைபாடி மகிழ்ந்தனர். ஆனால் ஒரு ஆஸ்திரேலியராக ரசிகர்கள் மீது கோபத்தைக் காட்டாமல் அவர் தன் மட்டையின் மூலம் பதிலடி கொடுத்தார், விளைவு 3 சதங்கள் அதில் ஒன்று அபார இரட்டைச் சதமாகும், ஒரே தொடரில் 700-க்கும் மேற்பட்ட ரன்களை 110.57 என்ற சராசரியில் குவித்து இங்கிலாந்து ரசிகர்களின் இதயங்களை வென்றார்.
கடைசியில் வசைபாடப்பட்டவர், ஏமாற்றுக்காரர் என்றெல்லாம் பட்டங்களை கொடுத்த அதே ரசிகர்கள் நேற்று அவர் ஆட்டமிழந்து செல்லும் போது எழுந்து நின்று கரகோஷம் செய்து ஆராதித்தனர்.
கடந்த மார்ச் 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடாமல் இருந்தார் ஸ்மித். பிறகு வந்து பலரது இதயங்களையும் அதுவும் பகைவர்களின் இதயங்களை வெல்வது சாதாரணமானது கிடையாது.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு ஸ்மித்தின் பேட்டிங் இரவுகளில் சொப்பனமாக வந்து பயமுறுத்தவே செய்யும், ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து வந்து ஆடிய ஷாட்கள் இவர்களின் கண்களை, மனதை விட்டு நீண்ட காலம் அகலாது என்று தைரியமாகச் சொல்லலாம். ஷேன் வார்ன் பவுலிங்கை பலவிதமாகவும் அடித்துக் காட்டிய சச்சின் டெண்டுல்கர் பற்றி ஷேன் வார்ன் இப்படித்தான் கூறினார், “சச்சின் மேலேறி வந்து தலைக்கு மேல் பந்தை தூக்கும் காட்சி என் வாழ்நாளின் தூக்கத்தைக் கெடுக்கும்” என்றார். அதே போல்தான் ஸ்மித்தின் பேட்டிங் ஜோ ரூட் உள்ளிட்டவர்களின் தூக்கத்தை கெடுக்கும்.
ஸ்மித் மக்களின் பாராட்டு குறித்து கூறும்போது, “நல்ல ஒரு வரவேற்பு, இன்னும் கொஞ்சம் ரன்களை எடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்” என்றார்.
நம்பர் 1 இடத்தை கோலியை விட சற்றே தொலைவுக்குக் கொண்டு சென்ற ஸ்மித் வீழ்ச்சியிலிருந்து எழுவது எப்படி என்பதற்கான வாழும் உதாரணமாவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT