Last Updated : 07 Jul, 2015 07:23 PM

 

Published : 07 Jul 2015 07:23 PM
Last Updated : 07 Jul 2015 07:23 PM

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

மிர்பூரில் நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுக்க, வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 138 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது.

மந்தமான பிட்சைப் போடுவதன் எதிர்பலனை இன்று வங்கதேசம் அனுபவித்தது.

டாஸ் வென்ற டுபிளெஸ்ஸிஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். குவிண்டன் டி காக், டிவில்லியர்ஸ் தொடக்கத்தில் களமிறங்கினர். இருவரும் இணைந்து 10.3 ஓவர்களில் 95 ரன்கள் என்ற அபாரத் தொடக்கத்தைக் கொடுத்தனர்.

வங்கதேச பவுலர் நசீர் ஹுசைன் தனது முதல் ஓவரில் 2 பந்துகளை லெக் திசையில் படுமோசமாக வீசி மொத்தம் 6 வைடுகளை அள்ளி வழங்கினார்.

குவிண்டன் டி காக் ஆக்ரோஷமாக ஆட, டிவில்லியர்ஸ், முஸ்தபிசுர் ரஹ்மான் கொடுத்த இடத்தைப் பயன்படுத்தி அடிக்கத் தொடங்க பவர் பிளே முடியும் போது தென் ஆப்பிரிக்கா 50 ரன்களை எட்டியது. வேகம், ஸ்பின் இரண்டையும் இருவரும் அபாரமாக எதிர்கொண்டனர். இருவரது கால் நகர்த்தல்களும் ஸ்பின்னுக்கு எதிராக அபாரமாக இருந்தது.

31 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் 44 ரன்கள் எடுத்த டி காக் அரபாத் சன்னி பந்தில் வெளியேறினார். நசீர் ஹுசைன் மோசமாகத் தொடங்கினாலும் 12-வது ஓவரில் அவர் டுமினி (6), டிவில்லியர்ஸ் (40 ரன்கள், 34 பந்து 6 பவுண்டரி) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார். டிவில்லியர்ஸ் இருந்திருந்தால் இன்று வங்கதேச பந்துவீச்சு தவிடுபொடியாகியிருக்கும், 12-வது ஓவரில் நசீர் ஹுசைன் எடுத்த 2 விக்கெட்டுகளால் ஸ்கோர் விகிதம் கொஞ்சம் பாதிப்படைந்தது.

டேவிட் மில்லருக்கும் ஒரு விக்கெட் கீப்பர் கேட்சுக்காக பலத்த முறையீடு எழுந்தது, ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை. அதன் பிறகு கட்டுப்படுத்திய வங்கதேசம், மில்லருக்கும், டுபிளெஸ்ஸிக்கும் அடுத்த 6 ஓவர்களில் 33 ரன்களையே விட்டுக் கொடுத்தது. பிட்ச் மிகவும் மந்தமாக அமைய ஸ்ட்ரோக் பிளே சாத்தியமாகவில்லை. டுபிளெஸ்ஸி 16 ரன்களில் வெளியேறினார்.

மில்லர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 பந்துகளில் 30 ரன்களை மேனேஜ் செய்தார். ரைலி ரூசோவ் கடைசியில் 6 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 19 ரன்கள் எடுக்க, மில்லரும் இவரும் இணைந்து கடைசி 2 ஓவர்களில் 32 ரன்களை விளாசினர் தென் ஆப்பிரிக்கா 169 ரன்களை ஒருவாறாக எட்டியது.

வங்கதேசம் இந்த முறை எச்சரிக்கையாகத் தொடங்கியது, வெய்ன் பார்னெல், கைலி அபாட் ஆகியோர் கொடுத்த இடத்தைப் பயன்படுத்திக் கொண்டு சவுமியா சர்க்கார் 6 பவுண்டரிகள் விளாசினார், ஒரு சிக்சரும் அடங்கும்.

தமீம் இக்பாலும் இவரும் இணைந்து 35 பந்துகளில் 46 ரன்கள் என்ற தொடக்கத்தைக் கொடுத்தனர். பார்னெலிடம் 13 ரன்களில் தமிம் வெளியேற, 21 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த சவுமியா சர்க்கார், லீயி என்ற அறிமுக ஸ்பின் வீச்சாளரிம் ஃபிளைட்டில் ஏமாந்து ஸ்டம்ப்டு ஆனார்.

அடுத்த 13 ரன்களில் வங்கதேசம் 4 விக்கெட்டுகளை இழந்தது. ஷாகிப் உல் ஹசன் (8), பாங்கிசோ பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சபீர் ரஹ்மான் 1 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 19 ரன்களிலும் வெளியேற, நசீர் ஹுசைன் 0-வில் அவுட் ஆக, 12.2 ஓவர்களில் 82/6 என்று சரிந்தது வங்கதேசம்.

பிறகு அபாட்டின் யார்க்கர்கள் டெய்ல் எண்டர்களை வீழ்த்த 138 ரன்களில் சுருண்டது வங்கதேசம், டி20 தொடரை 0-2 என்று இழந்தது. அறிமுக ஸ்பின்னர் லியீ, பாங்கிசோ, மற்றும் கைல் அபாட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக லியீ தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக டுபிளெஸ்ஸிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x